Monday 17 September 2012

கள்ளிக் காட்டு காதல்...


கள்ளிக் காட்டில்
சுள்ளி பொறுக்கும்
சாக்கு சொல்லி,
உன்முகம் காண
ஓடிவந்தேன் துள்ளி...
நாழி கரைய ஏனோ
நீ இன்னும் புலப்படவே இல்லை...
கருவை மரங்களும்
"களுக்" என சிரித்தது
நான் தனித்த நிலை கண்டு...
மழை தாங்கிய மேகமாய்...
நீறு பூத்த நெருப்பாய்...
சோகம் தாங்கிய மனதோடு
கலங்கிய வீசிய காற்றில்
கொஞ்சமாய் கலந்து புழுதியோடு சேர்ந்து
உன்னைத் துழாவினேன்...
கிடைத்தபாடில்லை...
பாறாங்கல் தாங்கிய நெஞ்ச அலைகளோடு 
சுள்ளி எடுக்காமலே திரும்பிய என் கண்முன் 
கத்திவீசும் பார்வையோடு 
அருகில் வந்து ஸ்பரிசம் நெருங்க 
அணைக்கும் ஆசையில் 
அருகில் நின்றிட்டாய்...
குத்தினேன் கோபத்தில்
உன் நெஞ்சில்
என் கையால்
வலிக்காத மென்மையோடு...
"பிரிந்து போன உயிர் மறுபடி
வந்தமர்ந்தது போலுள்ளதடா 
நீ வந்து சேர்ந்த இந்த பொழுது...
மீண்டும் சென்றால் வரவே மாட்டேன் 
என்று உறுதி சொல்லிவிட்டதடா இந்த உயிர்..."
என ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்த என்னை,
கை தொட்டு
விரல் பிடித்து
நெட்டிதனை பறித்திட்டாய்..
சோகம் மறைந்து
இன்பமாய் பிறந்த 
காதல் வார்த்தைகளோடு 

கதைத்தோம்...
ரசித்தோம்...
ருசித்தோம்...
புசித்தும்விட்டோம் அந்த பொழுதை...
நேரம் கரைய சூரியன் உறங்க
விலகாத உள்ளத்தை உன்னோடு விட்டுவிட்டு
வெறும் கூடாய் திரும்பி போக எத்தனித்தேன்..
"சுருக்" என நெருஞ்சி முள்ளாய்த் தைத்தது 
சுகம் மறைந்த அந்த பொழுது..
விலகப் போன 
வளையல் ஆடிய என் கை பிடித்து 
 தவழ்ந்து வந்த கன்ன முடி ஒதுக்கி வைத்து
கலங்கிய கண்கள் பார்த்து
இறுதி மூச்சை தக்க வைத்தாற்ப்போல்
இருந்த மூக்கைத் தொட்டு
மரணத் தருவாயில் துடிப்பது போன்ற இதழில் 
கல்வெட்டு முத்திரையை
முத்தம் ஒன்றை செதுக்கிட்டாய்...
உனைவிடுத்து
கவலைதோய்ந்த உன் முகம் பார்த்து
"அரைகுறையாய் செதுக்கிய சிலையாய்
மாறிவிட்டேன்...
மீண்டும் வருவேன் தினம் ஒருமுறை ...
முழு சிலையாய் நீ செதுக்கி முடிக்கும்வரை ..."
நீரில்லாமல் நொடியில்
பூத்தது புன்னகை...

 
கள்ளிக் காட்டு காதல்...

1 comment:

  1. குத்தினேன் கோபத்தில்
    உன் நெஞ்சில்
    என் கையால்
    வலிக்காத மென்மையோடு...
    "பிரிந்து போன உயிர் மறுபடி
    வந்தமர்ந்தது போலுள்ளதடா
    நீ வந்து சேர்ந்த இந்த பொழுது...
    மீண்டும் சென்றால் வரவே மாட்டேன்
    என்று உறுதி சொல்லிவிட்டதடா இந்த உயிர்..."
    இந்த வரிகளைப் படிக்கையில் எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வருகிறது

    செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
    வல்வரவு வாழ்வார்க் குறை


    வார்த்தைகள் என்ன அழகாக உங்கள் கை வசம் வந்திருக்கிறது. அருமை

    ReplyDelete