Tuesday, 30 April 2013

ஏக்கத்தோடு விழி வீசி....


காற்றின் அசைவையும் 
கட்டி இழுத்து '
காதல் கணை தொடுக்கும் 
காதலர்களுக்கு 
மத்தியில்

முகம் அறியா 
குணம் தெரியா 
மனம் பொருந்திய 
அந்த திருட்டு கள்வனை 
எதிர்நோக்கி 
தன் 
நினைவலைகளை நீராட்டுகிறாள்

அக அழகு 
கலந்துவிட்டிருந்த 
பருவ செழிப்பில்,

குணம் கொண்டிருந்தவனை 
மணம் முடிக்க மா ஆசை கொண்டாள்

வளர்ச்சி, வளைவு 
அழகு, ஆளுமை 
பரிவு, பாசம் 
காதல், காமம் 
எண்ணம், எழுத்து 
இவைகளின் 
அரசனாக

முடிசூட்டவிருக்கின்ற 
தன்னுள் பாதியை 
செதுக்கிக்கொண்டிருக்கின்ற 
செறிவு நிறைந்த 
சங்கக்காரன் அவனுக்காக

தன் பிழை திருத்தி 
புத்துணர்ச்சி பூட்டி 
கறை மறைத்த 
முழுநிலவாய்

முக மலர்வோடும் 
அக தெளிவோடும் 
அமைதியாய் 
காத்துக்கொண்டிருகிறாள் அவள்

அவனைப் போலும் 
தேடிக் கிடைக்காத 
தென்றலை முழுதாய் 
தன்னுள் 
ஸ்பரிசிக்கச் செய்து

எதிர் பாரா முத்தம் ஒன்றை பெற 
ஏக்கத்தோடு விழி வீசி....

Thursday, 25 April 2013

சிதைக்காமல் உன்னுள் சிறைபட...

மழை கோர்த்த
மேகம் ஓன்று
மௌன நடை
பயின்ற மாலையில்,

காதலிலே
சுளுக்கு எடுக்கும்
கள்ளன் அவன்
கடற்கரையோரம் 
காத்திருக்க,

காலத்தின்
பொறுமைக்கு
கட்டுபட்டவளாய்

மனதுக்குள்
மகிழ்ச்சி
ஊஞ்சலாட
கருநீல சேலையை
ஒழுங்கு செய்தவண்ணம்
முன்னோக்கி
நடந்து வந்தவளை

இமைக்க மறந்த
கண்ணோடு
விழுங்க ஆரம்பித்தான்
காத்திருந்தவன்

அருகில் அவள்
வந்தமர்ந்ததும்

பருவத்தில்
செய்த சண்டித்தனத்தில்
கொட்டிய
பருக்கள் அடங்கிய
முகத்தில்
பொசு பொசுவென்றிருந்த
குறும்பு மறைத்த
மீசையை
முறுக்கி விட்டு

சிகரெட் மறைத்த
உதடுகளில்
பூசிய மென்மையோடும்

குறும்புக் கண்களில்
தவள விட்ட
காதலோடும்

குழந்தைத்தனம்
நிறைந்தவளின்
கொஞ்சும் முகம்
பார்த்து
ரசிக்க தொடங்கினான்...

அவனது விரல்கள்
ஆயாசம் தொடர
அவளின்
கன்னக் கத்துப்புகளை
தொட எத்தனித்தவன்

ஏதும் செய்ய இயலாதவனாய்
அவளின் தோள் பட்டை
தொட்டு

காதுக்கு அருகில்
வசப்பட்டிருந்த
காற்றை
துரத்தி விட்டு

பூசலோடு
ஏங்கிய மனமுமாய்
புன்னகை ஒன்றை
முன் வைத்து

மெலிதான
சப்த்தத்தில்
சொன்னான்

"ஏய்... பாப்பு...
அசையாதே...

என்னுள்
உன்னை
உள்வாங்கி கொண்டிருக்கிறேன்

சிதைக்காமல்
உன்னுள்
சிறைபட

இவ்வுலகத்தோடு
நாமிருவரும்
வசப்பட

என்னை
புதைத்துக்
கொண்டிருக்கும்
இந்த தருணம்
மீண்டும் கிடைக்கும் வரை" என்று 

(Deepa Vennila)

சூறையாடிய புலி ஓன்று சுணங்கினால் தகுமா?


வேதனையின் 
உச்சகட்டத்தில் 
விம்மலுடன் வெடித்தது 
அழுகை

நெஞ்சுக் கூடு 
சக்கையாய் பிழியப்
பட்டார்ப் போன்ற 
வேதனை 

ரத்தநாளங்கள் 
உறைந்து சிதைந்தார்ப்போன்ற 
உள்ளுணர்வு 

தனிக்காட்டு ராணியாய் 
சுதந்திரம் அனுபவித்தவள் 
சுக்குநூறாக்கப்படுகிறாள் 
குடும்ப அரசியலின் கோரப்பிடியில் 

தனக்கு விருப்பமில்லாதவையை 
துரிதப்படுத்தி 
செய்ய முனைபவர்களால் 
 தன் வாழ்க்கை பாதிக்கப்படுமே 
என  தளராத 
மனதோடு போராடுபவளுக்கு 
கிடைத்த பெயர் 
அடங்காதாவள் 
திமிர் பிடித்தவள்
  
விட்டுக் கொடுக்காத 
உறவுகளின் மதிப்பை 
துச்சமாய் தூக்கி 
எறிய மனம் துடிக்கிறது 

உணர்வுகளை 
கொச்சைபடுத்துபவர்கள் 
முகம் முழுதும் 
தீப் பிழம்பை 
அள்ளி பூச 
நினைக்கிற வேகம் 

மற்றவர்களுக்காக 
வாழ, 
மரித்துப் போகக்கூட 
அனுமதி தரும் 
பெற்றவர்களை 
பிணந்தின்னியிடம் 
தள்ளி விடலாமா 
என வெடிக்கும் எரிச்சல் 

விளையாட்டாய் 
ஏற்பட்ட 
கோபத்தில் 
வினையோடு 
பழி வாங்க 
முடிச்சு போடும் 
உடன்பிறப்புகளை 
எட்டி உதைத்துவிடலாம்
என்கின்ற அளவிற்கு 
வெறுப்பு 

உயிரை விட 
தன் குடும்ப உறவுகள் தான்
பெரிது என 
இத்தனை நாள் எண்ணியவளுக்கு 
கிடைத்த பரிசு 
இவர்களின் மேல் 
எதுக்களிக்கிறது 
இந்த வன்மம்...

ஆனால் 
ஏதும் செய்ய இயலாதவளாய் 
தனக்குத் தானே 
தண்டனை கொடுத்துக் 
தன் இயலாமையை 
வெளிக்கொணர்கிறாள் 
உண்ணாவிரதம் இருந்து 
சோர்ந்து தினமும் 
ஒருக்கட்டத்தில் 
பேசகூட
திராணியற்று போய்விடுகிறாள் 

சூறையாடிய 
புலி ஓன்று 
சுணங்கினால் தகுமா?

இந்த கயவர்களின் 
கட்டுக்குள் இருந்து 
பொருமவதைக் காட்டிலும் 
கொதித்து 
எழுந்த மனதோடு போராடுவதே 
பலம் பொருந்திய பயன் 
என சீறும் வேங்கையென 
சிலிர்த்து
எழுந்துவிட்டாள் 

சமுதாயத்திற்கு 
கற்றுக்கொடுக்க வேண்டியதை விட 
தன் குடும்பத்திற்கு 
கற்றுத்தர
வேண்டியதுதான் 
அதிகம் என...


தீண்டளுக்குரியவன் ...
நிலவின் பிரகாசத்தின் 
கூட்டுக்குள் 

அடங்கிய நான் 

சிந்தும் வியர்வை 

துளிகளுள்
புதைந்த நான் 

செதுக்கிய சிலையின் 
வடிவத்திற்குள் 
ஒளிந்த நான் 

ஓய்ந்த அலைகளின் 
குளிரில் 
கரைந்த நான் மேகங்களின் 
சங்கமிப்பில் 
மூழ்கிய நான் 

நாதங்களின் 
இசையில் 
மயங்கிய நான் 

முத்தங்களுக்குள் 
மூச்சு முட்ட 
ஏக்கமான நான் 

பித்தங்களின் பிடியின் 
பிணற்றுகிறேன்

யாருமில்லா  
ஓரறையில் 
இருளின் 
துணையோடு 
ஏக்கம் தீர்க்க 
முற்படுகிறேன் 

எனக்கான 
என்னுடைய 
உயிர் 
எங்கே 
தத்தளிக்கிறதோ...?

அது மீண்டு வந்து 
என்னை 
மாண்டு போக வைக்குமோ 
அதன் உயிருக்குள்...

சொல்லா வேதனையாய் 
சுழன்று வீசும் 
என் மனமே...

பொறுமை கொள்வாயாக
நிதர்சன வாழ்க்கையில் 
நீடூழி வாழ 
தென்றலின் மீதமர்ந்து 
தீண்டவருவான் 
உன் தீண்டளுக்குரியவன் ...
( Deepa Vennila)

நட்சத்திரங்களுக்கு மத்தியில்....


பளீரென்று 
ஒளி கொட்டி 
மறைந்து விட்ட 
மின்னல் கீற்றுபோல்,

எவருமறியா 
தீட்டி வைத்த 
புகழ் கொட்டும் 
புனையா சித்திரம் போல்

மேகங்களின் 
நடுவில் 
மெதுநடை பயின்று 
மிளிர்கின்ற 
கவிதையாய் 

நெருப்புக் 
கிடங்குக்குள் 
கொதித்துக் கொண்டிருக்கும் 
மனதாய்,

மழை துளிகளுக்குள் 
செதுக்கி வைத்த 
உயிராய்

காற்றுக்கு 
வலி இல்லாமல் 
தூது தொடுக்கிறேன் 

நினைவுகளுக்கு 
நெளிவு வராமல் 
நினை நினைக்கிறேன் 

எங்கு நீ 
மறைந்து எனை 
அணைத்தாலும் 
 

முகம் அறியா 
உனக்காக 
முகத்தாமரையாய் 
மலர்ந்து 
தினமும் தேடுகிறேன்

விரைந்து எனிடம் 
வந்திடு 
விதியை அழித்து
எனை சேர்ந்திடு

காதலில் காமமும் 
காமம் மறந்த காதலும் 
இவ்வையம் அறியா 
இன்பமும் 
எனக்கு மட்டும் 
கொடுத்திட 
எல்லைகள் கடந்து 
ஓடி வா...

தூக்கம் தொலைத்து 
பகலும் மறந்து 
எனை அறியாது தேடுகிறேன் 
உன்னை 

நள்ளிரவு வானில் 
பரவிக்கிடந்த 
நட்ச்சத்திரங்களுக்கு 
மத்தியில்....

Wednesday, 24 April 2013

கோடி இன்பம்


                "இந்த மாப்பிள்ளையை வேணாம் சொல்ற நீ, இனிமேல் இந்த வீட்ல இருக்க கூடாது..." கசையடியாய் பேசும் அப்பா,  "நீ எவனையாவது கூட்டிடுதான் ஓட போற "கடுகடுக்கும் அம்மா, "நீ என்ன ஐஸ்வர்யா ராயோ..." எரிந்து விழும் தம்பி, "உன் மூஞ்சிக்கு இந்த மாப்பிள்ளை கிடைச்சதே பெரிசு..." ஏசிர்பத்து போடும் தங்கை. விரக்தியின் உச்சக்கட்டத்திற்கு அனுப்ப வழி வைத்து கொடுத்தனர் அவளை.  மொத்தத்தில் வெறுப்பின் மறு உருவமாக மாறி இருந்தது அந்த குடும்பம். என்னவொரு திருத்தம் என்றால் ஒரு நேரத்தில் பாசத்தின் மாற்றுவாய் இருந்த குடும்பம். இப்படி ஆனதற்கு காரணம் மூத்தவளுக்கு முதலில் திருமணம் முடித்து வீடு கடத்த வேண்டும் என்பதே... 
                                ஆனால் அவளுக்கு அந்த மாப்பிள்ளையை கட்டிக்கொள்வதில் துளியும் விருப்பம் இல்லை. தான் எதிர்பார்த்ததில் ஒரு சிறு அளவுகூட அவன் இல்லாததில் பொய்த்துப் போய்விட்டாள். மனம் நிறைவு பெறா நிலையில் மணமுடிக்க மறுக்கையில் கூட பிறந்தவர்களும் கோப பிழம்பை உமிழவே கொதித்துத்தான் போயிருந்தாள். இவர்களுக்கு இடைஞ்சலாய் இல்லமால் போய்விடலாம் எனமுடிவு எடுக்கையில் தன் மனம் நிறைய மாட்டிக்கொள்கிறான் அவன். அவன் பற்றிய விவரங்கள் அவளுக்கு அத்துப்படி ஏனென்றால் ஒரு முறை பேருந்து பயணத்தின் போது இவள் மாட்டிக்கொள்ள இருந்த விபத்தில் இவன் சிக்கி, அப்படியே இருவரும் நன்கு பரிட்சியமாகி இருந்தனர். 
                         ஆனால் அவன் இவளது சாதிக்காரன் அல்ல.... யோசிக்கிறாள். பின் தெளிவான முடிவு எடுக்கிறாள். "தன் விருப்பத்தை பெரிது படுத்தாது, சாதி, பணம் வெறியில் மாய்ந்து போயிருக்கும் பெற்றோர்களோடு அல்லோல படுவதற்கு, உயிர் காப்பாற்றிய சமயத்தில் கால் இழந்து விட்டிருந்த அந்த கண்ணனோடு வாழ்வது கோடி இன்பம்" என்று.

Tuesday, 23 April 2013

பிடித்தவைகள்.... 1

உருப்பெற்ற
ஊரில்
எனக்கே எனக்காய்
பிடித்தவைகளுள்
சில...

சொட்டு சொட்டாய்
விழும் நீரின்
சப்தம் கேட்க பிடிக்கும்....

கொக்கரிக்கும் சேவலின்
கொண்டை நிறம் பிடிக்கும்...

மழலையின்
உதட்டு சிரிப்பில்
வழியும் எச்சில்
பிடிக்கும்...

அம்மாவின்
தலையில்
வைத்திருக்கும்
பூ வாசம் பிடிக்கும்...

மேயும் ஆட்டுக்குட்டியிடம்
வம்பு பண்ண பிடிக்கும்...

பால் சுரக்கும்
மாட்டிடம்
பால் குடிக்க பிடிக்கும்....

ஆடும் மயிலின்
கழுத்தை கட்டி
அணைத்து கொள்ள பிடிக்கும்...

வேப்பம் பழத்தில்
இருக்கும் இனிப்புச்சாறை
ருசிக்க பிடிக்கும்...

பொன்வண்டு பிடித்து
இலை ஊட்ட பிடிக்கும்...

வயல் மோட்டாரில்
குதூகலமாய்
குளிக்க பிடிக்கும்...

கூட்டாஞ்சோறு ஆக்கி
கூட்டமாய் தின்ன
பிடிக்கும்...

கொட்டும் மழைக்கு
மேனி முழுதும்
தானம் செய்ய பிடிக்கும்...

( பிடித்தவைகள்.... 1
தொடரும்...)

Monday, 22 April 2013

வர்ணனை - 3

சோளக்காட்டுக்குல
என்னை
சொக்க வைச்சவனே...

நீ பார்த்ததுல
சோழிபோல
சொலளுதே
எம்ம மனம்....

கட்டுக்கடங்கா காளயும்
... உனக்கு அடங்க
வீராப்பு வாச்சனே...

உன் கெண்டகாலு
பட்டா
கெக்கலிக்கும்
கெண்ட மீனா இவ ...

சொணங்காம
நீ உழைக்கையில
சொகமேரும்
இவ மனசு...

ஏறு பூட்டி
எறங்கயில
இசை பாடும்
இவ நெஞ்சு..

திமிறி துடிக்கும்
நெஞ்சுக் கூடும்
செவத்த விழி
கண்ணுகளும்
கருமேனி
கட்டுடம்பும்

வெசன படாத
வெள்ள மனசும்
நிறைஞ்சு இருக்கு
உம்ம மேல...

பொருமுதே
இவ கூட்டம்
பொய்க்காம
நீ இவளுக்குன்னு ஆனதுக்கு

(கிராமத்து நாகரிகம்
வர்ணனை - 3
தீபா வெண்ணிலா)

வீணாய் உருவானது

அடர்ந்த காட்டுக்குள்
அமைதியாய் இருந்த
அந்த கோவிலின்
கட்டிட கலை
பார்க்க சென்றவனிடம்,

எல்லையோர கருப்ப சாமீ
எதுவும் செய்ய இயலா
தன் கையாலாக
நிலையில் வருந்தி
... கவலையாய் சொன்னது

"மனிதனுடைய
அறிவு வளர்ச்சியில்
வீணாய் உருவானது
மண்ணாலான நாங்கள் தான்" என்று...

(தீபா வெண்ணிலா)

வர்ணனை - 2

உதட்டின் மேல்
லேசாய் அடர்த்தியாய்
படர்ந்திருந்த
கரு மீசை....

கன்ன அழகை மறைக்க
லேசாய் வளர்த்து விட்டிருந்த
கொஞ்ச தாடி...

எடுப்பான பல்வரிசையில்
எட்டிபார்த்தர்ப் போலிருந்த
ஒரு தெத்துப் பல்...

வசீகரப் புன்னகைக்கு
திருஷ்டி போல் அமைந்த
கன்னக்குழி ...

காற்றோடு போட்டியிட்டு
கதை பேசும்
கற்றை முடி....

புகை கறை
படியாதிருந்த
சிமிட்டல் கொண்ட
சிவந்த உதடு...

கொஞ்சம் சுயநலமாகவே
அமைந்திருந்த
தேக வண்ணம்...

கிறங்கடிக்கும்
குரலில்
கலந்திருந்த
கம்பீர தெளிவு பேச்சு...

இளம்நீல வண்ண சட்டையில்
கோடுகளாய் இருந்த
மடிப்பு கலையாத 
உடை...

பார்த்தாலே
பரவசப்படுவர்
அனைவரும் எளிதில்
அப்படியொரு
கலையாவனவன்....

எளிதில் உதவக்கூடிய
உள்ளம்...

எதார்த்தத்தின்
எல்லை மனம்...

நட்பு கொள்வதில்
நாகரிகமானவன்...

இப்படியொரு இளைஞன்
இவள் வசத்தில் இன்று 

(நவீன கால வர்ணனை - 2 
தீபா வெண்ணிலா )

வர்ணனை... 1

ஒற்றளபெடையில்
ஒற்றி எடுத்த வரியில்
கால வேகத்தில்
கடைந்து எடுத்த
திடகாத்திர மேனியும்
பரந்து விரிந்த
விசால பார்வையோடு
கலந்துள்ள வலிமையும்
ஒன்றாய் கொண்டெடுத்த
கரிகாலனின்
பேரனவன்
சொலித்தான்
வைரம் தோற்ற வெண்மையில்...
மாடத்து நிலாவும்
பொறாமை கொண்டது
அவனழகு கண்டு

(அரசர்காலம் பற்றிய ஆய்விற்கான ஆண்கள் குறித்து எழுதிய வர்ணனை... 
தீபா வெண்ணிலா)

Saturday, 20 April 2013

கருமேனி கருவாச்சி...

 
இலக்கியங்களின்
காதல்களில்
பல புது படைப்பு...
இது குறவஞ்சியல்ல
இந்த கருமேனி
கருவாச்சியின்
காதல் வஞ்சி...

Friday, 19 April 2013

கூடு உரித்த பட்டாம்பூச்சியே....

 
கூடு உரித்த
பட்டாம்பூச்சியே
உலகு பார்த்த
உன்னுடைய இந்த முதற்பொழுதில்
தூதாய் போய் வா
... தலைநகர் சென்ற எந்தலைவனிடம்...

அவர் மேனி தீண்டாது
சொல்லி வா என் சோகத்தை....

"கார்குழல் கழுத்துடை தரித்து
வெண்புரவி மேலோடும்
அஞ்சா நெஞ்சுடைய தலைவா...
உன் நிழல் படா
நுன் தலைவியி னுடல்
மேனி ரோமம் சிலிர்ப்படைய,
உணவிறங்கா சோர்ந்துபோன
உடல் மெருகேற,
கவலைதோய்ந்த மனம்
புத்துணர்ச்சி பெற
தாமதம் காட்டாது
புரவியை திருப்புவாயாக...

"ஏக்கத்திலே உயிர் துறக்க
அவள் தயாராகி விட்டாள்
நீ வரவேண்டி...
விரைவாயாக...."
என்று

கோவிக்காமல் வந்துவிடு என் காதல் மழையே..

மங்கிய ஒளியில்
மாய்ந்து போய்
வறண்டு கிடந்த
என் மேனி,

... அந்தி வண்ண
வானவில்லின் சாரலாய்
உன் வருகையில்
உருப்பெற்று
கொழுத்த கன்னக் கதுப்புகளில்
உன் ஒரு துளி முத்தம்
உருண்டோடியது...

அலையடித்து ஓய்ந்த
மனதாய்
இறக்கி வைத்த
பாரமும்
கரைந்து ஓடியது...

நீருஞ்சிய
நன்னிலம்
காயமேற்பட்டார்ப்போல்
காய்ந்து கிடக்க
தீராத் தாகமும்
தீர்ந்து போனது
விடாத உன்
முத்த மழையால்...

செல்லமாய்
செந்தேனாய்
அமுதாய்
ஏகலைவனாய்
ஆரமுதனாய்
நினை நான் கொஞ்ச
நில்லாது பெய்து
நிரப்புவாய்
என் நேசத்தோடு சேர்ந்து
நல் நிலத்தையும்..

கோவிக்காமல் வந்துவிடு
என் காதல் மழையே..

(தீபா வெண்ணிலா)

உற்று நோக்குங்கள்..

அதிகரித்து விட்டனர்
எதிரிகள்...
கவனத்தில் கண்ணையும்
கண்களில் செவியையும்
உருவமாய்கொண்டு
உற்று நோக்குங்கள்..

எகிறி விழும் சிலும்பலும்
ஏதாவது ஒரு புறக்கணிப்பை
உருவாக்கி
இடைவெளியை
திரிதப்படுத்துவதாய்
இருந்துவிடப்போகிறது

குடும்ப பாரம்...

 
சிறுபிள்ளையென
சிறகடித்து பறந்தவள் மீது
பாறாங்கல்லென
சுமத்தப்பட்டது
குடும்ப பாரம்...

உடன்பிறப்புகளின் படிப்பு,
அப்பாவின் பீடி செலவு,
அம்மாவின் மருத்துவ செலவு,
தன் திருமணத்திற்கு
தேவை இல்லாமல் சேர்க்கும்
நகைக்கான தண்ட காசு
என பெரும்பட்டியலாய் நீளும்
குடும்ப தேவையினம் கண்டு
ஒரு நொடி சுவாசமே
மூச்சு வாங்கியது...

தன்னுடைய தேவையை சுருக்கினால்
மாறுமே இவை நிறைவேறும் என
அடிப்படை தேவையையும் கொண்டாள்...

காலத்தின் போக்கில்
கவலைகளேதுமின்றி
களிப்புற்றிருந்தவள்
இன்று கடின உழைப்பின்
கோரத்திற்குள்
கட்டுண்டு கிடக்கிறாள்...

இளமையின் வீம்பில்
எகிறித்துடித்து
அலைபாய்ந்த மனதினை
அடக்குவதற்கு
அல்லோலப்பட்டு
அவதியுறும் அவளிடம்
விளையாட்டான வாழ்க்கை
விதிர்த்து துடிக்கிறது....

இன்பம், இளமை
துன்பம், துடிப்பு
சோகம், சுகம்
கோபம், கரிசனம்
அழுகை அரவணைப்பு
பாசம், பந்தம்
என பல உணர்ச்சிகளை
தன்னோடு சேர்த்து
தொலைத்து விட்டிருந்தவள்
அப்பொழுது தான்
உணர ஆரம்பித்தாள்
கால சக்கரத்திற்குள் சிக்கி
முழுவதுமாய் நைந்து போயிருந்ததை....

மிச்ச மீதி கூறுகளை
திரட்டி வைத்து
ஒருங்கே அமைந்தவள்
வெளி நோக்கையில்தான்
உணருகிறாள்
தான் முதிர்ந்துவிட்டிருந்ததை....

(தீபா வெண்ணிலா )

Thursday, 18 April 2013

கிராமப்புற நிர்பந்தம்...

இருளின் ஆக்கிரமிப்பில்
சிறைபட்டிருந்தது
ஊர் முழுதும்....

குடிகொண்டிருந்த
ஒட்டு மொத்த நிசப்தமும்
மெதுவாய் இடையூறு பட்டது
சிலரின் குறட்டை சப்தத்தில்...

களவு பயத்தில்
இழுத்து சாத்தப்பட்டிருந்தன
அவரவர் வீடுகள்...

திடீரென்று ஏற்பட்ட
இனவெறித் தாக்குதலில்
ஏக வசனத்தில்
காரி உமிழ்ந்து கொண்டிருந்தன
நாய்கள்....

துளி வெளிச்சமும்
துடைர்த்தார்ப்போன்ற
இரவில் ,

திகிலடைந்தவளாய்
திண்ணையோரம்
துவண்டு கிடந்தாள்
தனிப் பெண்ணொருத்தி...

நாழி கரைய கரைய,
நெஞ்சுக் கூடு
விம்மல் கொண்டது
அச்சத்தால்...

இருட்டின் ஊடல்களில்
சிக்கித் தவித்து
சுழற்றப்பட்டாள்...
விசும்பல் கொண்டாள்...

திகமானது என்னவோ
பயம்தான்...

ஆசுவாசப்படுத்தி
தேற்றிக் கொள்வதற்குள்
அடகிருந்தது
அவள் சுவாசம்...

மூல காரணம்...
மாத 3 நாட்களில்
வீட்டுக்கு வெளியில்
என்ற கிராமப்புற நிர்பந்தம்...மன்னிக்க முடியாது உன்னை....

மன்னிக்க முடியாது உன்னை....
மரத்து போன என் இமைகளுக்கு
சிமிட்ட முடியவில்லை...
உலர்ந்து போன என் நாவிற்கு
சுவைக்க அறிய முடியவில்லை...
குழைந்து போன என் மேனிக்கு
தெளிவு பிறக்கவில்லை...
அடங்கிப் போன என் மனதிற்கு
ஆளுமை வரவில்லை....
இறந்திருந்த என் நினைவுகளுக்கு
உணர்ச்சி கிடைக்கவில்லை...
சகல நிறுத்தத்திற்கும்
சாமானியமாய் அமைந்த காரணம்
பெண் தானே என்று
என்னை இளக்காரம் செய்த நீ...
என்னுள் பாதியை அமைந்த நீ
என் சோகம் பங்கிட்ட நீ
என் உரிமையோடு போட்டியிட்ட நீ
என்னல்மே நானான நீ
இன்று உதாசீனப்படுத்தினாய்
"பொம்பளைமாதிரி நட" என்று...
உனக்காய் உருக்குலைந்த நான்
இன்று உருவாரம் எடுக்கிறேன்
பெண்ணென என்னை இகழ்ந்த 
உன் வீரபொய்மை
விரைவில் பொய்த்துவிட...

"மறை பொருள்"

 
 
சந்தனத்தில் நீராடி,
அலைகற்றை கூந்தலை
உலர்த்தி அடக்கி,
வாசமல்லி மணம்கமழ
நேர்த்தியான பின்னலில்
சரத்தோடு சொருகி,
முகப்பூச்சு அளவாயிட்டு,
முழுமதி கண்களில்
மை தனை தீட்டி,
உதட்டுச்சாயம் ஒளிர,
பளிச்சென்றிருந்த
நீலவண்ண பட்டுத்தாவணியை
பார்த்து உடுத்தி,
 

இணையான கலரில்
தோடோடு, வளையலும்
கழுத்தில் கல்மணியுமிட்டு,
கண்ணாடிபார்த்து
களிப்புற்றாள் தன்னழகில். . .
மிச்ச ஒரு வேலையாய்
கண்கள் மட்டும்
தெரியவிட்டு
உடுத்திக்கொண்டாள்
கருப்புவண்ண பர்தாவை 
அந்தப் பளிங்கு பெண். .

("மறை பொருள்" என்ற மௌன குறும்படம் சொல்லிய கவிதை)

நிறுத்தத்தில் நிற்கும் நிகண்டுகள்....

 

 
 
அரசலும் உரசலுமான பேருந்து பயணத்திற்கு
அவதி அவதியாய் அரைத்த துவையலில்,

கூலிக்கு செல்லும் அம்மாவிற்கு கொஞ்சமும்
தனக்கு வைத்த தயிர் சோறுக்கு கொஞ்சமும்
அள்ளிக்கொண்டு,

லேசாய் செய்த முகப்பூச்சோடு 
மடிப்பான சேலையை எடுத்துவிட்டு கிளம்பினேன்....

நிறுத்தத்தில் நின்ற கூட்டத்தோடு சேர்ந்து
நானும் நசுங்க தயாராக்கினேன் உடலும் மனதும் சேர்ந்து...

 
"வகிடு எடுத்த தலையில்
வழித்து வைத்த எண்ணையோடு
 
பிசிறு நீங்கிய பின்னலில்
கொஞ்சம் சொருகிய பூவோடு
எளிமையான உடையில் தயாரான
கல்லூரி பெண்கள்...

அவர்களை கண்ணும் கருத்துமாய்
காவல் செய்து கடலை போட
தயாராய் இருந்த விடலை பையன்கள்...

தினசரி கூலி பெற
பழைய சோறு வாளி தூக்கிய
குடும்ப பொறுப்பாளர்கள்...

வீட்டுபாரம் சுமக்க படிப்பை துறந்து
சிறு கடைகளுக்கு எடுபிடியாய்
அடிமைப்பட்ட, ஏக்கம் நிறைந்த
விழிகளைக் கொண்ட
'சிறுமி - கன்னி' இரண்டிற்கும் இடைப்பட்ட பெண்கள்...

பட்டிக்காட்டிலிருந்து பட்டணம் நோக்கி
படிப்பு பெற பொதிமூட்டையாய்
புத்தகப் பையுடன் எதிர்பார்த்த பேருந்தை
எட்டி நோக்கிய வண்ணம் நிற்ற பள்ளி சிறார்கள்...

அடிக்கடி இருமலுக்கும்
அவதிப்படும் உடம்புக்கும்
வைத்தியம் பார்க்க
அரசு ஆஸ்பத்திரிக்கு போக முனைத்த வயோதிகர்கள்..

கம்புக்கு கட்டிய சேலையையும்
காமத்தோடு நோட்டம் விடுவதுபோல்
நிற்றிருந்த கழிசடைகள்....

காதலிக்கு ஏற்றவாறு
காதல் பாட்டு செல்போனில் 
ஒலிக்கவைக்கும் சில்லுவண்டுகள்...

இவர்களுடனான என் பயணம்
தொடர்கிறது தினந்தோறும்...