Tuesday, 27 November 2012

சாதீ....அணைக்கப்படவேண்டிய ஒரு தீ....

                                   
                    தர்மபுரி அருகே காதல் திருமண பிரச்சினையால் கடந்த 7–ந்தேதி 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்ததே...


காதல் திருமணத்தால் ஏற்பட்ட இந்த கலவரத்திற்கு பிறகுதான் பல மீடியாக்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் மற்றும் சாதி எதிர்ப்பு, மறுப்பு தெரிவிக்கும் இயக்கங்களும் தர்மபுரிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முற்பட்டார்கள்... இது நல்ல விஷயம்தான்.


ஆனால் இந்த தருமபுரி போன்று பல தருமபுரிகள் இன்னும் இருக்கிறது எனது கிராமம்போல்... தந்தை பெரியாரின் கருத்துகளும், ஜாதி ஒழிப்பிற்காக அவரது உழைப்பின் வழியும் விழிப்புணர்வே பெறாத தென் தமிழகத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு முழுவதும் சென்று சேர ஜாதி மத ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு பற்றி பிரச்சாரக் கூட்டங்களும், நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதுவரை யாருமே கண்ணில் பார்த்திராத "ஜாதி" என்னும் தீயை அணைக்க முடியும். இப்பொழுது இருக்கும் இளைய சமுதாயம் முற்றிலும் ஜாதி ஒழிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளனர்.


இருந்த போதிலும் என்னை போல் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு காதல் செய்துவரும் இளம் சமூகம் தன்  பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகின்றனர். ஆதலால், எங்களுக்கு உதவியாக, ஜாதியை ஒழிக்க, எண்களின் குக்கிராம மக்களுக்கு ஜாதி பற்றிய தெளிவினை ஏற்படுத்த மீடியாக்களும், திராவிட இயக்கமும் உதவிட வேண்டுகிறோம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியால் தான் மீண்டும் ஒரு தருமபுரி கிராம நிலைமை ஏற்படாமல் தடுக்க முடியும்.


பொது இடத்தில் வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு சமூக புரட்சியாளர்களால் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பதால் உங்கள் முன் இக்கருத்தை முன்வைக்கிறேன்...

Friday, 9 November 2012

தீபாவளி தரப்போகிறது எனக்கு தீராவலி....


தீபாவளி கொண்டாடுவதில் விருப்பம் இல்லை...
உறவுகள் மொத்தமும் கூடி இருப்பதால்
திடீரென்று தீபாவளிக்கு
சொந்த ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்...
மனம் முழுக்க பயத்துடன்
பயணிக்க காத்திருக்கிறேன்....


எப்பொழுதும் பறந்து திரியும்
அந்த சிட்டு தனம் என்னிடம் இல்லை...
எப்பொழுதும் ஆராவரத்துடன் செல்லும் என் பயணம்
உயிரான காதலனும்
உளமார அன்புகாட்டிய
அவன்தான் குடும்பமும் நீங்கி
அமைதியான முறையில்பயணிக்கிறது...
காதலை வீட்டில் சொல்ல பயம் ஏதும் இல்லை...
துணிச்சல் பல இருந்தும்
துவளுகிறேன்...
என் காதல் எங்கே என் குடும்பத்தின்
உயிரைக் காவு வாங்கி விடுமோ என்று...


 

பெற்றோரின் ஆசை
என் திருமணம் வெகு விமரிசையாகவும்
என் கணவன் துணிச்சல் மிக்கவனாகவும்
என் எதிர்கால குடும்பம் வசதியாகவும் பாசமாகவும்
இருக்கவேண்டும் என்பதே...
இப்படிப்பட்ட அனைத்தும் ஒரு சேர கிடைத்தும்
தூக்கி எறிவதிலேயே
ஆக்கம் கொடுக்கின்றனர்....


தனித்து விடப்பட்ட
சிறகொடிந்த பறவையாய் நான்..

  இதயத்தின் இரண்டு ஓசையாய் இருகுடும்பமும்...
எதைவிடுத்து எதை நீக்க....
முயன்றும் தோல்விதான் என தெரிந்தும்
புரிந்து கொள்ள என் பெற்றோர்களை
திசை திருப்ப பார்க்கிறேன்...

இதயம் வெளிப்படையாய் இருந்தால்
நான் படும் பாடு கண்டு சுருங்கியே
இறந்திருக்கும்...
என்ன செய்ய...
எனக்குள் இருக்கும் இந்த
மன போராட்டத்திற்குத் தீர்வு 

என் பெற்றோரின் சம்மதம் மட்டுமே......சோகத்தை சுமந்த படியே
உயிரினை அடமானம் வைத்துவிட்டாற்போல்
உலர்ந்து உலர்ந்து
சுருங்கி போனவளாய்
தென்றல் புகா மனம்கொண்டு
இல்லாத இதயத்தோடு
நொறுங்கிப் போய்
பயணிக்கிறேன் என் இல்லத்திற்கு
நிம்மதி இல்லாத மனதோடு....
எனினும் இந்த தீபாவளி தரப்போகிறது
தீராவலி....

Tuesday, 6 November 2012

மதம் செய்த மாயைதான் தாலி...                        
"மூடத்தனத்தின் முடை நாற்றத்தின் சின்னம் தாலி"
"பெண்ணுரிமையை தட்டிப் பறிக்கும் சின்னம் தாலி"
"ஆணினத்தின் அடிமை என்பதை சுட்டிக் காட்டும் சின்னம் தாலி"
“பெருங்குற்றவாளிகளுக்கு கைவிலங்கு…
ஆனால் ஒரு குற்றமும் செய்யாத பெண்ணினத்திற்கோ
கழுத்தில் கட்டிய தாலி விலங்கு"


 "தாலி ஒரு வேலி", "தாலி ஒரு பாதுகாப்பு", "அந்நியன் ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்கு ஒரு அரண்" என்று சொல்வதெல்லாம் பித்தலாட்டக்காரர்களின்  புலம்பல்கள். "ஆணின் அடிமை", "சம்பளமற்ற வேலைக்காரி" இவைகளை குறித்துக் காட்ட கட்டப்படும் அடிமை சின்னம்தான் தாலி.

இந்த அடிமை சின்னத்தை பெரிதும் போற்றக்கூடிய வகையில் இன்றும் நம் பெண்ணினம் வந்து கொண்டுதான் இருக்கிறது. சங்க இலக்கியங்களில் ஆணின் வீரத்தை காட்டி ஒரு பெண்ணை மணந்தான் என்றும், வீரத்தின் அறிகுறியாக விலங்குகளின் பற்கள், கொம்புகளை தங்க அணிகலன்களாக அணிந்து பெண்களை மணந்தார்கள் என்று நூல்களின் வாயிலாக அறிந்தோம். மேலும் சில சாதியினர் பொற்கொல்லர்கள் தன்னுடைய வேலைத்திறனை காட்டிப் பெண்ணை மணந்தார்கள் என்றும் தெரிய வருகிறது (மணமேடை அருகிலேயே தங்கத்தை உருக்கி தாலி அணிவித்ததாக). ஆனால் இந்தக் காலத்தில் கடையில் தங்கம் வாங்கி தாலியை அணிவிக்கிறார்கள். எப்படிப் புனிதமாகும்..?


பெண்ணுரிமை தட்டிப் பறிக்கும் சின்னம்தான் தாலி. பொதுவாக ஒரு பெண் பிறந்தவுடன் தகப்பனுக்கு அடிமை, தாலி அணிந்தவுடன் கணவனுக்கு அடிமை, கணவன் இறந்தபின் தாலி சின்னத்தை அறுத்து அவள் மகனுக்கு அடிமையாகிவிடுகிறாள். (மதம் செய்த மாயை தாலி)

            தாலியைப் பொறுத்தவரையில் சில பெண்களின் உள்ளத்தில் ஏற்றி வைத்த சொற்கள் "தாலியைக் கழற்றினால் கணவனின் உயிர்க்கு ஆபத்து", "விரைவில் குடும்ப பந்தம் முறிந்து விடும்" என்ற மூட கருத்துக்களை பெண்ணின் உள்ளத்தில் பதித்ததால் தாலியைப் புனிதமாகப் போற்றுகின்றனர். அதே நேரத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்படும் மோதல்களின் போது பெண் தாலியை தூக்கி எறிவதும் பின்னால் மாற்றிக் கொள்வதையும் கண்கூடாக பார்க்கிறோம்.மேலும் தாலியைப் புனிதமாகக்  கருதும் பெண்ணினம் செய்யும் செயல்கள் போற்றத்தக்கதாக இல்லை. 

சுயமரியாதைக் கொள்கையுள்ள பெண்கள்  தாலி அணிவதில்லை. பெரியாரின் பேச்சுக்கள் அவளை உரிமை பெற வைத்து விட்டது. இவ்வையகத்தில் ஆணுக்குள்ள உரிமைகள் அனைத்தும் பெண்ணுக்கு வேண்டும் என்று எங்களைப் போன்ற பெண்களை விழிப்படைய செய்து விட்டது. எங்கள் திருமணங்களில் தாலி இல்லை. மாலை இல்லை, அழகான தத்துவச் சொற்கள் உள்ளன. அதிலும் தாலிச் சின்னம் எப்படி உண்டாயிற்று என்பதையும் அறியும் போது, சிரிப்பாகவும் அவமானவாகவும் இருக்கிறது. எனவே இந்த தாலி என்னும் அடிமை சின்னத்தை ஒழிப்போமாக..


மனிதருள் மாமனிதன் சே குவேரா...


பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்...

1960ல் எடுக்கப்பட்ட சேவின் பிரபல்யமான புகைப்படம்கியூபாவின் வரைபடம்
கியூபாவின் ஒரு பகுதிகுடும்பத்தினருடன்சதுரங்கம் விளையாடும் சே...
ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சே...சமவுடமையின் இலச்சினை...


ஜூலை 26 இயக்கத்தின் கொடி...சே பயணித்த பாதை 1953-1956...22 வயதில் சே குவேரா...


மனைவி ஹில்டாவுடன்...
Sunday, 4 November 2012

அவனுக்காக மட்டும்....
எப்படி ஆரம்பிப்பது
என்றெண்ணுகையில் போராட்டம்தான் ...
அன்பானவனே...!
      உயிரானவனே...!
மூச்சானவானே...!
      கண்ணாளனே....!
கருத்தாளனே...
      கள்ளங் கபடமில்லா காதலனே...!
எதற்கு முதலிடம் கொடுப்பது...
திணறிப் போய் திக்கு முக்காடினேன்  சிறு வினாடி...
எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு
என்னுள் இருந்தே ஆரம்பித்தேன்...
    என்னுடையவனே...!
    என் இதயத்தில் முப்பொழுதும் இனிப்பவனே..!
அளப்பரிய பாசத்தை ஆளும் ஆளுமையே...!
என்பால் பொழியும் அளவற்ற உன்தம் அன்பில்
நெகிழ்ந்து நெகிழ்ந்து இறக்கிறேனடாநொடிக்கு நொடி...
நான் தரித்த மானுட பிறவியின் பயனாய்
உனக்கென்று பரிசளிக்க என்னுயிர் தவிர
மீதவற்றை தொலைத்து விட்டேனடா...
பிழை பொறுத்து ஏற்றுக் கொள்
இந்த அற்ப உயிரை உன் வசத்தில் அடிமையாய்...
தெரிந்து கொள்...
பூலோகம் புதையும் வரை உன் புகழ் பாடுவேன்..
என் கருவில் மலர்ந்த கவிதைகளின்
தாய் நான் என்றால்
அக்கரு உருப்பெற உறுதுணையாய்
அமைந்த நீயே அதன் தந்தையாய்...
காரிகை இவள் கோபம் கொள்ளுகையில்
கவனமாய் கடைபிடித்த உன் உணர்ச்சி கண்டு
மெய்சிலிர்த்து தான் போனேனடா...
எனை நீங்கா சிறுபிள்ளைத்தனம் அறிந்து
சேயென உச்சிமுகர்ந்திட்டாய்...
ஆதலால்....
என் கைவிரல்கள் கோபம் கொள்ளும்
உன் கவி படைக்கப் படாத பொழுது...
கருவிழிகள் இரண்டிலும் நீர் சுரக்கும்
உன் முகம் தன்னை நோக்காத பொழுது....
இணையும் இதழ்களும் இன்னல் பல ஏற்கும்
உனைப் பேச மறந்த பொழுது....
உயிரின் காதலனே...
உவமையாய் நீ உருப்பெற
உயிர்தந்து உதவிடுவேனடா....
தமிழ் மொழியின் சிறப்பான
'ழ' கரம் போல் சிறந்தவனே...
ஒப்பனைக் களஞ்சியமான
உன் வரி பல படித்து
பஞ்சணைப் பறவையாய் பறந்து
நாடுவேன் உன் நெஞ்சணையை...
உன்னுள் ஒருங்கிணைந்த நான்
இப்பிறவி முடித்து வாழ்வின்
ஆதாரத்தைக் கைக்கொண்டு விட்டேனடா....
உனக்கான நன்றிகளை சொல்ல
இக்கவி மட்டுமல்ல....
ஓராயிரம் கவி படைத்தாலும்
போதாதடா...
வாழ்..! வாழ்ந்துகொண்டே இரு...!