Sunday, 4 November 2012
அவனுக்காக மட்டும்....
எப்படி ஆரம்பிப்பது
என்றெண்ணுகையில் போராட்டம்தான் ...
அன்பானவனே...!
உயிரானவனே...!
மூச்சானவானே...!
கண்ணாளனே....!
கருத்தாளனே...
கள்ளங் கபடமில்லா காதலனே...!
எதற்கு முதலிடம் கொடுப்பது...
திணறிப் போய் திக்கு முக்காடினேன் சிறு வினாடி...
எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு
என்னுள் இருந்தே ஆரம்பித்தேன்...
என்னுடையவனே...!
என் இதயத்தில் முப்பொழுதும் இனிப்பவனே..!
அளப்பரிய பாசத்தை ஆளும் ஆளுமையே...!
என்பால் பொழியும் அளவற்ற உன்தம் அன்பில்
நெகிழ்ந்து நெகிழ்ந்து இறக்கிறேனடாநொடிக்கு நொடி...
நான் தரித்த மானுட பிறவியின் பயனாய்
உனக்கென்று பரிசளிக்க என்னுயிர் தவிர
மீதவற்றை தொலைத்து விட்டேனடா...
பிழை பொறுத்து ஏற்றுக் கொள்
இந்த அற்ப உயிரை உன் வசத்தில் அடிமையாய்...
தெரிந்து கொள்...
பூலோகம் புதையும் வரை உன் புகழ் பாடுவேன்..
என் கருவில் மலர்ந்த கவிதைகளின்
தாய் நான் என்றால்
அக்கரு உருப்பெற உறுதுணையாய்
அமைந்த நீயே அதன் தந்தையாய்...
காரிகை இவள் கோபம் கொள்ளுகையில்
கவனமாய் கடைபிடித்த உன் உணர்ச்சி கண்டு
மெய்சிலிர்த்து தான் போனேனடா...
எனை நீங்கா சிறுபிள்ளைத்தனம் அறிந்து
சேயென உச்சிமுகர்ந்திட்டாய்...
ஆதலால்....
என் கைவிரல்கள் கோபம் கொள்ளும்
உன் கவி படைக்கப் படாத பொழுது...
கருவிழிகள் இரண்டிலும் நீர் சுரக்கும்
உன் முகம் தன்னை நோக்காத பொழுது....
இணையும் இதழ்களும் இன்னல் பல ஏற்கும்
உனைப் பேச மறந்த பொழுது....
உயிரின் காதலனே...
உவமையாய் நீ உருப்பெற
உயிர்தந்து உதவிடுவேனடா....
தமிழ் மொழியின் சிறப்பான
'ழ' கரம் போல் சிறந்தவனே...
ஒப்பனைக் களஞ்சியமான
உன் வரி பல படித்து
பஞ்சணைப் பறவையாய் பறந்து
நாடுவேன் உன் நெஞ்சணையை...
உன்னுள் ஒருங்கிணைந்த நான்
இப்பிறவி முடித்து வாழ்வின்
ஆதாரத்தைக் கைக்கொண்டு விட்டேனடா....
உனக்கான நன்றிகளை சொல்ல
இக்கவி மட்டுமல்ல....
ஓராயிரம் கவி படைத்தாலும்
போதாதடா...
வாழ்..! வாழ்ந்துகொண்டே இரு...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment