Monday, 31 December 2012

மறக்காதே மாமனே....வெளக்கு வச்ச நேரம் 
மருதாணி கன்னமிட 
அரைச்சு வச்சென் 
நெத்திலி குழம்பு...
வீட்டரிசி சோறும் 
வெந்த கருவாடும் 
துடிச்சுகிடக்கு பானையிலே...


வெல்லனமே நீ வந்தா 
வெளாசிட்டு போய்டலாம்...
நேரம் முடிஞ்சுபோனா 
மடிஞ்சு போகும் என்னுசுரு....
மறக்காதே மாமனே....
உம்மாமன் மக நான்தானே

சின்ன பொண்ணு இவ...ஒத்தையில நீ வர 
சொத்தையா நான் ஆனேன்...
சின்ன பொண்ணு இவ 
செதச்சுடாத இவ மனச 
அத்த மகனே உத்தமனே 
எங்கன்னழகு மச்சானே...
காலம்போயி நாம் வாழ்வோம் 
கவலை எல்லாம் கொன்னுபோட்டு...

புதுவருச பொறப்பாம்...இன்னைக்கில்ல நேத்தில்ல 

நாள் முழுக்க உழைச்சும் 
என்ன சுகம் நாங்கண்டேன்?
தெனமுந்தான் பொங்குறேன் 
நெல்லரிசிக்கு பதிலாக
என்னுடைய ஏக்கத்தை... 

நாலெழுத்து படிச்சுருந்தா 
உசந்துதான் இருந்திருப்பேன்,
ஒன்னும் படிக்காம 
ஓடாத்தான் தேஞ்சுட்டேன்,
விடிஞ்சு எழுந்தும் 
வெளக்கு வச்சும் 
தீராத என் வருமை 
வருசம் ஒன்னு பொறக்கையில
வழி ஒன்னு வருமான்னு 
ஏக்கமா காத்தேனே...
எள்ளளவு நம்பிக்கையும் 
தீஞ்சுதான் போயிருச்சு..
ஏமாத்தம் தான்மிச்சம் ...
வருசம் பல ஓடிருச்சு 
வயசும் ஆயிருச்சு 
இப்பவும் எப்பவும் 
கூலிக்கே நான் மாரடிக்கிறேனே....
இதுல வேற புதுவருச பொறப்பாம்...?

எங்குட்டு போயி இந்த கதைய சொல்ல...?
 

Saturday, 29 December 2012

செவத்த மச்சான் வரும் திசையெல்லாம்...


செவ்வண்ண சேலையுடுத்தி 

சரம் மல்லி தொடுத்து வச்சு 
செவத்தொரம் சாஞ்சேனே...
செதுக்கி வச்சேன் எவ்விழிய
செவத்த மச்சான் 
வரும் திசையெல்லாம்...
சிமிட்டமால் இருக்க
காவல் வச்சேன் 
என் உயிரை....வானமிருட்டிருச்சு...

வருத்தமுந்தான் தாக்கிடுச்சு....
வர்ற வழியில வஞ்சரையும் 
கொஞ்சி என அணைக்க மல்லிகையும் 
கொத்தாக வாங்கி வரும் மச்சானே... 
நெல்லு குத்தி 

பொங்கி வைப்பேன் உமக்கு 

நிறைமாசம் எந்தாய் வீடு 

நான் போறமட்டும் ...

Friday, 28 December 2012

எச்சி கஞ்சியால...


கரிசக் காட்டுக்குள்ள 

கெண்ட சேல நான் கட்டி 

கூழு சோறு கொண்டுவந்தேன் 
களச்சு இருக்கும் மச்சானுக்கு...பசிக்கு குடிக்காம 

வம்பு பண்ண துடிக்கிறியே 
குடிச்சு முடி சீக்கிரம் 
என் தாகம் தணியட்டும் 
மீதி வச்ச எச்சி கஞ்சியால...

முதியார் இல்லம்..வசதியான முதியார் இல்லம் 
வைத்து நடத்துபவனின் 
பெற்றோர்கள் 
அனாதையாய் 
வெட்ட வெளியில்...

உன் விழி ஆவியாலவெள்ளாவி வெளவ போன 
மச்சான் 
உன் விழி ஆவியால 
நான் வெந்தேனே 
உன் நெஞ்சம் காணலியோ

உசுரூ உருகி ஓடி வரும்...கண்ணை மூடி 
மண்ணுக்கு போனாலும் 
உசுரூ உருகி 
ஓடி வரும் 
உன்னை தேடி மச்சான்...

வாசமாய் வீசும் மச்சான்...


கஞ்சித்தண்ணி தாகமெடுக்க 

வரப்போரம் போயிருந்தேன்...
தூர தெசையில நீ வர 
வறண்டு போன எந்தேகம் 
வாசமாய் வீசும் 
மச்சான் 
நீ வர்ற தெசை பார்த்து....


தாயத்து போட்ட மச்சானே....
அடுமனையாய் நான் கெடந்து பரிதவிக்க 

அருவாமீச முறுக்கிவிட்டு 
எட்டிநின்னு கண்ணடிச்சு 
திருவிழா வளையல 
மடிமேல எறிஞ்சுட்டு 
மெத்தனமா போனியோ 
தாயத்து போட்ட மச்சானே....

Thursday, 27 December 2012

கனவு காதல்...


நீல வண்ண நீர்பரப்புக்கிடையில் 
அமைதியான நிலப்பரப்பு...
சில்லென்ற தென்றல் 
கரைபரப்பில் இருந்து 
தென்னைகளின் ஊடேவந்து 
தழுவிக் கொண்டதில் 
இமைகள் இரண்டும் காந்தமாய்...


உன் உரசலான மூச்சுக் காற்றில் 
ஸ்பரிஷம் மெல்லியதாய் சிலிர்க்க
உழைத்த களைப்பில் உறங்கச்
செல்லும் சூரியனைக் காண 
ஆவலாய் வந்த நிலா 
நம் காதல் கண்டு 
நட்சத்திரங்களோடு சேர்ந்து 
கண்சிமிட்ட, நேரப்போழுதில் 
இரவு உணவும் சுவைக்கப்பட்டது....


வெளிச்சமாய் நிலவின் ஒளிவீச 
பூமியின் இயற்க்கை சாரம்சத்தை 
வியந்து அளவளாவினோம்...
கீத ஓசை செவி நுழைய 
இரவின் அணைப்பில் 
துயில் தழுவ, 
விடித்து எழுவதற்குள் 
காதைப் பிளக்கும் வெடிகுண்டு சத்தம்...
அந்நொடி உணர்ந்தேன் 
வெடி தயாரிக்கும் 
தொழிற்சாலையில் 
காதலனை தொலைத்து 
கொத்தடிமையாய் சிக்கி 
ஆலையிலே உறங்கியதை...

எனக்கு பிடித்த விளையாட்டுகள்...

கிராமப்புறங்களில் பூப்படைந்த பெண்கள் தாங்கள் இருக்கும் குடிசை ஓலையை விட்டு வெளியில் வரமால் இருக்க பல்லாங்குளி விளையாடுவது வழக்கம்... இப்பொழுது இந்த மாதிரி விளையாட்டுகள் மறைந்து வருகிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு...


தாயத்தை உருட்டும் போது எப்படியாச்சும் அந்த காயை தூக்கிடணும்னு நினைச்சுக்கிட்டே சுழட்டி சுழட்டி உருட்டுவோம் பாருங்க.. அந்த சுகமே அலாதிதான்... இப்ப யாரு இதெல்லாம் உருட்டுற்றா..?
பொங்கல் நிகழ்ச்சிகளில் குழுவாக சேர்ந்து கும்மி கொட்டி விளையாடிய காலமும் இப்போது நினைவலைகளில்..பள்ளி பருவத்தில் இந்த விளையாட்டில் பங்கேற்றவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா..?


பசங்களோட சண்டை போட்டு விளையாடி அம்மாக்கிட்ட அடிவாங்கிய நாட்கள் நினைவுக்கு வருகிறது இந்த விளையாட்டால்


ஐந்தாம் வகுப்புவரை எழுமிச்சை கரண்டி தூக்கி ஓடுவதில் பங்கு பெற்று விளையாடிய நியாபகம்
                                     


சின்ன வயசுல நொங்கு வண்டி ஒட்டுவோமே... சூப்பரா இருக்கும் இந்த விளையாட்டு

Wednesday, 26 December 2012

Bodhi Vriksha - Short Film - போதி விருட்சம்... அமைதியின் வெளிச்சம்....


தோழர் மகாராஜா சண்முக சுந்தரத்தின் கதை இயக்கத்தில்"குறு வட்டம் இல்லை வாழ்க்கை.. அது விசாலமான அழகு" என்பதை மைய்யப் படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஒரு குறும்படம்... 
படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தாஜ் நூரின் மெல்லிய இசை தூறலாய் தொடர்ந்து பயணித்து உள்ளது எளிமை அழகு... கார்த்திக் பழனிச்சாமி மற்றும் தாஸ் அருள்சாமியின் ஒளிப்பதிவு துல்லிய பார்வையோடு தெளிவான அமைப்பு அழகு... கதையின் பயணம் மூன்று பேரை மட்டும் தாங்கி முதலில் முதியவரின் ஓவியம் மற்றும் புத்த சிலையுடன் ஆரம்பிக்கிறது... இரண்டாவதாக முதியவரின் பொறுப்பில்லா பையனுடனான உரையாடலோடு தொடர்கிறது. மூன்றவாதாக ஒரு சிறு அகதிப்பெண்ணுடன் தொடர்ந்து, கடைசியில் அந்த பையனுக்கு அமைதியின் சாராம்சம் விளங்கியதாய் படம் முடிவடைகிறது. 13 நிமிடங்களில் முடிவடையும் இந்த குறும்படத்தில் சில இன்னும் சில வசனங்கள் சேர்த்திருக்கலாம். முடிவானது கொஞ்சம் விளக்கமாய் அளிக்கப் பட்டிருக்கலாம். முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழர் மகாராஜா சண்முக சுந்தரம். 


Monday, 24 December 2012

துளிர்த்துக் கொண்டிருக்கும் சதை ஆசை....


               மனதால் குரூரமாய் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே அடுத்தவர்கள் சேதமாகும் அளவிற்கு துன்புறுத்த முடியும்... டில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி கற்பழிக்கப் பட்ட செய்தியால் இந்த நாடே கொந்தளித்துக் கிடக்கிறது... டில்லி மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்தமாதிரியான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. தவறுகள் மேலோங்கிக் கிடக்கின்றன.. தட்டிகேட்டால் தடி அடி நிகழ்த்துகிற சமூகம் இது. அடிப்படையாகவேஇவர்கள் யாரும் யோசித்து பார்க்க மாட்டார்களா..? 


பண ஆசை அடங்கி சதை ஆசை அதிகரித்துப் போய்க்கிடக்கும் சமூகமாய் இந்த நாடு மாறி நாறிக் கொண்டிருப்பது வருந்தத்தக்க ஒன்றாக இருக்கிறது. - தொடர் கற்பழிப்பு தொடாராமல் இருக்க வழி..? தன் சுகம்தான் பெரிது என்றெண்ணி ஒரு பாலின் எதிர்காலத்தை நாசமாக்கும் நல்லவர்களே... உங்களை பற்றி பேசுவதற்கு கூட நா கூசுகிறது. நீங்கள் படுத்தும்பாட்டில் அவர்கள் துடித்திருப்பது கூடவா உங்களது எண்ண ஓட்டத்தை மாற்றவில்லை...


சுதந்திரம் கிடைத்ததாய் சொல்லப்படும் இந்த இந்தியாவில் தான் பெண்களின் கற்பு மட்டும் அடிமையாய் அடக்க முனைகிறார்கள் சில கயவர்கள்.. இந்த மாதிரி அசம்பாவிதங்கள் இந்தியா முழுவதும் முற்றிலும் ஒழிய அரசின் நடவடிக்கை என்ன..? மக்களின் கோரிக்கைகளுக்காகவும், நலனுக்காகவும், பாதுகாப்பிற்க்காவும் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு என்ன உறங்கி கொண்டிருக்கிறதா..? இந்த சமூகத்திற்கு என்று நியமிக்கப்பட்ட காவலர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..? இந்த நாட்டில் புரட்சி உருவாக வேண்டும், சுத்தமான நாடாக வேண்டும், பெண்களின் கற்பு காக்கப்பட வேண்டும், சீர்குலையா சுதந்திரம் நிலவ வேண்டும் என்பது நீரில் எழுதப்பட்ட எழுத்தாகவே இருக்கிறது....? பெண்களின் வளர்ச்சியை மட்டம் தட்டும் ஆண்களும் இருக்கிறார்கள், வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் ஆண்களும் இருக்கிறார்கள்... வன்புணர்ச்சி செய்யும் ஆண்களும்தான் இருக்கிறார்கள்.... பல குணம் தருகிறது ரணம்.... இப்படிப்பட்ட நாட்டில் தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு....

Saturday, 22 December 2012

நம்மளோட நாடு....


நாடென்ன நாடு...?


வளர் சிறார் பருவம் 

வறுமையில் வாடையில் 
கவள சோறு கையில் தர 
யோசிக்கும் நாடு 
நாடென்ன நாடு....?தன்வீட்டு பிள்ளைக்கு 

தைரியம் சொல்லும் மாந்தர்கள் 
எதிர் சட்டம் கண்டு 
பயந்து நடுங்கும் 
நாடென்ன நாடு...?

பள்ளிக் குழந்தைக்கு 
பாதுகாப்பில்லா 
உயிர் தொலைக்க 
துணை செல்லும்
நாடென்ன நாடு...?

வயது வந்த பிள்ளைகள் 
தன் இனம் என்றெண்ணா 
காமவெறிக்கு சோறுபோட்டு 
பசி தீர்த்து உடல்கொல்லும் 
நாடென்ன நாடு...?

தன் சுத்தம் பேண 
நேரம் ஒதுக்கும் மனித இனம் 
பொது இடம் தான்கண்டு 
தன் கழிவு வெளியேற்றி 
அசட்டை செய்யும் 
நாடென்ன நாடு...?

நியாய விலைக்கடையில் 
நேராய் நின்று நியாயமாய் 
வாங்க மறுத்து 
அவசரபிடியில் அல்லோலப்பட்டு 
அடித்து பிடித்து வாங்க முனையும் 
நாடென்ன நாடு...?

அழிந்தே விட்டது என்றெண்ணிய 
ஜப்பான் நாடு 
உலக பணக்கார வரிசையில் 
முன்னிற்க,
அதைக் கண்டும் திருந்தாத 
நாடென்ன நாடு...?

வீண்முயற்சி மட்டும்கொண்டு 
விதாண்டவாதம் புரிய 
முன்னிற்கும் மாந்தர்களைக் கொண்ட 
நாடென்ன நாடு...?


சிறு எறும்பின் சுறு சுறுப்பை 
தன்வாழ்வில் கடைபிடிக்கா
நாடென்ன நாடு...?

தேனியின் அயராத உழைப்பு கண்டு 
உயிர்த்தெழா சில மனிதர்களால் 
பின்னோக்கி செல்ல வழிவகுக்கும் 
நாடென்ன நாடு...?

நான் பாடுபடுவேன்...
நான் பாடு படுவேன்...
என் இந்தியா நிச்சயம் 
சுத்தமான, விவேகமான,
எழில்மிகு நாடாக மீண்டும் மாற 
நான் நிச்சயம் பாடு படுவேன்... 
என உறுதி மொழி மேற்கொண்டு

ஒவ்வொருவரும் 
சுயமரியாதையையும் 
பகுத்தறிவையும் 
பொதுநலமும் 
தன்னலமும் 
தன்னகத்தில் கைக்கொண்டு 
தலைநிமிர்ந்தால்


நம் நாடு போல்
திறமையான
வேறொரு நாடு எங்கே..!!

Friday, 21 December 2012

பொங்கல் திருநாள் நம்ம ஊரில்....


சூரியன் வரும்முன் 

குளித்தெழுந்து 

வாசல் முழுதும் கோலமிட்டு 

வண்ணங்கள் பல தீட்டி 
மண்பானைகள் 
இரு விறகடுப்பில் வைத்து 
மஞ்சள் சுத்தி 
பிள்ளையார் பிடித்து 
அடுமனை வரைந்து 
மாக்கோலம் வரைந்து 


பக்கவாட்டில் கரும்பு கட்டி 
பச்சரிசி பானையில் இட்டு 
சூரியன் துயில் விழிக்கையில் 
குதூகலத்தோடு பொங்கலோ பொங்கல் 
என மகிழ்ச்சி புரியும் தருணம் 
முதல்நாள் சூரிய பொங்கல்....

இரண்டாம்நாள்


பொங்கல் வைத்து 
அதேபாணியில் ஊர் முழுதும் ஓன்று சேர்ந்து 
ஒருபானையில் பொங்கல் செய்து 
உழவன் வீட்டு உதவாளிக்கு 
உணவை படைத்து இன்பமாய் போகும்
அந்நாள்....

மூன்றாம் நாள் 
புதிதாய் குளித்து மலர்ந்து 

பாவாடை தாவணி அணிந்து
அதற்கேற்றாப்போல் தோடு மாட்டி 
மல்லிப்பூ தலையில் சூட்டி 
வீட்டுக்கு வரும் வெள்ளை வேட்டி அணிந்த 
முறைமாமன்கள் மீது 
மஞ்சள்நீரை கரைத்து எடுத்து 


துரத்தி ஊற்றி ஓடி மறைந்து,
குறும்போடு சேர்ந்து துள்ளிவரும் காதலோடு 
மாலையில் கோவிலில் 
வளையல், பாசி வாங்கித்தர சொல்லி 
வாட்டி எடுத்து வாங்கி போட்டுப்பார்க்கும் 
நேரம் சுகம்...

இவ்வளவு அற்புத தருணங்களை 
அள்ளித்தரும் பொங்கல் விழாவை 
சீரும் சிறப்புமாய் 
உற்றார் உறவினர்கள், 
உயிர் தோழமைகளுடன் கொண்டாடி மகிழ்வோம்....


பொங்கல் வாழ்த்துக்கள்....

Wednesday, 19 December 2012

தாய் ஓவியமே...

உதிரத்தின் உயிரோசையே...
மூன்று பத்துமாத அவஸ்தையில் 
எங்களை பெற்றெடுத்தாய்...
வெளியுலகம் நாங்கள் தொட்ட 
நாள் முதல்கொண்டு
வறுமையின் அரண்மனையிலேயே
பட்டத்துரானியாய் வாழ்கிறாய்...
புது உயிரின்
ஆதிமூலம் அதன் தாய் தான்...
கூலியே உன்குல வாழ்க்கை என
நாளொன்று விடுப்பு கொண்டால்
வாடிடுமே எங்கள் வயிறு என வருந்தி
வருடம் முழுவதும்
உழைக்கச் சென்றிட்டாய்....
பெண்மையின் சாயலில்
மூத்தவள் நான் மலரத் தொடங்கியதும்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திட்டாய்....
மறுகணமே மனம் சோர்ந்திட்டாய்..
மனம் முடிக்க பணம் சேர்ப்பதெப்படி என்றெண்ணி ...
கையாலாகா கணவனின்
உடல்நலம் பேணவும் உழைத்து உழைத்து
நோய்வாய்ப்பட்டிட்டாய் ...
விடுமுறைநாட்களில் மூத்தவள் நான்
உன் உழைப்பை என் கையில் ஏந்தினேன்...
என் இளையவனுக்கும்,
இளையவளுக்கும்
சேர்த்து படிப்பினூடே உழைக்க
ஊக்கப்படுத்திக் கொண்டேன்....
நோய்பிடி தாண்டிய நீ
மறுபடியும் உழைக்கச் சென்றிட்டாய்..
கிடைத்த நேரத்தில்
"நீங்கள் மூவரும் படித்து
நல்ல உத்தியோகம் செல்ல
உழைத்தே சாகிறேன் நான் மெல்ல..."
என அறிவுருத்திட்டாய்...
பொறுப்புணர்ந்து மூவரும் படித்திட்டோம்...
காலங்கள் ஓடியதில்
நல்ல நிலைமையில் மூவரும்...
என் இளையவர்கள் "முன் ஏரை
தொடர்ந்த பின் ஏராய்..."
துன்பம் பொறுத்த தாயை
கையில் ஏந்த முடிவெடுக்கையில்
"ஓய்வு எடுக்க நினைக்கையில்
உடலும், மனமும் இளைப்பாறலாம்
என்றுதான் எண்ணுகிறது...
ஆனால் ஓர்நாள் உழைப்பை நான்
நிறுத்தினால் என்னுயிர்
ஓய்வெடுக்கச் சென்றிடுமே...
என் பேரப் பிள்ளைகளின் வளர்ச்சி
நான் கண்ணில் காண
இப்பொழுது செல்கிறேன் உழைக்க...."
என்று பழைய சோறை
தூக்குவாளியில் எடுத்துக் கொண்டு
நடக்க ஆரம்பித்தாள்
அவளது பாதச்சுவடுகள் எங்களுக்கு
பிகாஷோவின் புகழையும் சேர்த்து வென்ற ஓவியமாய்...

Tuesday, 11 December 2012

நிலாக்காதலானே....சலனமற்ற ஏரிக்கரையில் அமர்ந்துகொண்டு 
நிலாக் காதலனை ரசித்துக் கொண்டிருந்தேன்...
ஏனோ அவன் பிரகாசம் வீச மறுத்தான்....
ஏனென்று வினவ...
"தூளியில் தூரிகை படரும் முன்பே 
அன்பே உன் வாடிய முகம்தன்னை
நான் நோக்கிய பொழுதில்
எழாத சோகம் ஒன்று எந்தன் நெஞ்சம் அப்பியது....
செவ்வானம் செவிமடுக்க
எந்தன் ஓவியத்தின் முகம்காணவே
முன்பொழுதிலே வந்து சேர்ந்தேன்...
விரைவில் உன் முகம் காணாததால்
என் முகப் பிரகாசம் மங்கியதடி
என் மஞ்சள் மங்கையே...
இனி மறு சூரியன் நாந்தானடி
குளுமை மட்டுமே என்
சொந்தமடி என் கண்ணின் காரிகையே... "
என்றெந்தன் புலம்பல்தனை
போக்கிட்டாய் பொல்லாக் காதலனே...

Tuesday, 27 November 2012

சாதீ....அணைக்கப்படவேண்டிய ஒரு தீ....

                                   
                    தர்மபுரி அருகே காதல் திருமண பிரச்சினையால் கடந்த 7–ந்தேதி 3 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி அனைவருக்கும் தெரிந்ததே...


காதல் திருமணத்தால் ஏற்பட்ட இந்த கலவரத்திற்கு பிறகுதான் பல மீடியாக்களும், சமூக சீர்திருத்தவாதிகளும் மற்றும் சாதி எதிர்ப்பு, மறுப்பு தெரிவிக்கும் இயக்கங்களும் தர்மபுரிக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த முற்பட்டார்கள்... இது நல்ல விஷயம்தான்.


ஆனால் இந்த தருமபுரி போன்று பல தருமபுரிகள் இன்னும் இருக்கிறது எனது கிராமம்போல்... தந்தை பெரியாரின் கருத்துகளும், ஜாதி ஒழிப்பிற்காக அவரது உழைப்பின் வழியும் விழிப்புணர்வே பெறாத தென் தமிழகத்தில் இருக்கும் பல கிராமங்களுக்கு முழுவதும் சென்று சேர ஜாதி மத ஒழிப்பு, மூட நம்பிக்கை அழிப்பு பற்றி பிரச்சாரக் கூட்டங்களும், நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இதுவரை யாருமே கண்ணில் பார்த்திராத "ஜாதி" என்னும் தீயை அணைக்க முடியும். இப்பொழுது இருக்கும் இளைய சமுதாயம் முற்றிலும் ஜாதி ஒழிப்பதில் முக்கியத்துவம் கொண்டுள்ளனர்.


இருந்த போதிலும் என்னை போல் கிராமப்புறங்களில் இருந்து கொண்டு காதல் செய்துவரும் இளம் சமூகம் தன்  பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகின்றனர். ஆதலால், எங்களுக்கு உதவியாக, ஜாதியை ஒழிக்க, எண்களின் குக்கிராம மக்களுக்கு ஜாதி பற்றிய தெளிவினை ஏற்படுத்த மீடியாக்களும், திராவிட இயக்கமும் உதவிட வேண்டுகிறோம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியால் தான் மீண்டும் ஒரு தருமபுரி கிராம நிலைமை ஏற்படாமல் தடுக்க முடியும்.


பொது இடத்தில் வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு சமூக புரட்சியாளர்களால் நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்பதால் உங்கள் முன் இக்கருத்தை முன்வைக்கிறேன்...

Friday, 9 November 2012

தீபாவளி தரப்போகிறது எனக்கு தீராவலி....


தீபாவளி கொண்டாடுவதில் விருப்பம் இல்லை...
உறவுகள் மொத்தமும் கூடி இருப்பதால்
திடீரென்று தீபாவளிக்கு
சொந்த ஊருக்கு செல்லவேண்டிய நிர்பந்தம்...
மனம் முழுக்க பயத்துடன்
பயணிக்க காத்திருக்கிறேன்....


எப்பொழுதும் பறந்து திரியும்
அந்த சிட்டு தனம் என்னிடம் இல்லை...
எப்பொழுதும் ஆராவரத்துடன் செல்லும் என் பயணம்
உயிரான காதலனும்
உளமார அன்புகாட்டிய
அவன்தான் குடும்பமும் நீங்கி
அமைதியான முறையில்பயணிக்கிறது...
காதலை வீட்டில் சொல்ல பயம் ஏதும் இல்லை...
துணிச்சல் பல இருந்தும்
துவளுகிறேன்...
என் காதல் எங்கே என் குடும்பத்தின்
உயிரைக் காவு வாங்கி விடுமோ என்று...


 

பெற்றோரின் ஆசை
என் திருமணம் வெகு விமரிசையாகவும்
என் கணவன் துணிச்சல் மிக்கவனாகவும்
என் எதிர்கால குடும்பம் வசதியாகவும் பாசமாகவும்
இருக்கவேண்டும் என்பதே...
இப்படிப்பட்ட அனைத்தும் ஒரு சேர கிடைத்தும்
தூக்கி எறிவதிலேயே
ஆக்கம் கொடுக்கின்றனர்....


தனித்து விடப்பட்ட
சிறகொடிந்த பறவையாய் நான்..

  இதயத்தின் இரண்டு ஓசையாய் இருகுடும்பமும்...
எதைவிடுத்து எதை நீக்க....
முயன்றும் தோல்விதான் என தெரிந்தும்
புரிந்து கொள்ள என் பெற்றோர்களை
திசை திருப்ப பார்க்கிறேன்...

இதயம் வெளிப்படையாய் இருந்தால்
நான் படும் பாடு கண்டு சுருங்கியே
இறந்திருக்கும்...
என்ன செய்ய...
எனக்குள் இருக்கும் இந்த
மன போராட்டத்திற்குத் தீர்வு 

என் பெற்றோரின் சம்மதம் மட்டுமே......சோகத்தை சுமந்த படியே
உயிரினை அடமானம் வைத்துவிட்டாற்போல்
உலர்ந்து உலர்ந்து
சுருங்கி போனவளாய்
தென்றல் புகா மனம்கொண்டு
இல்லாத இதயத்தோடு
நொறுங்கிப் போய்
பயணிக்கிறேன் என் இல்லத்திற்கு
நிம்மதி இல்லாத மனதோடு....
எனினும் இந்த தீபாவளி தரப்போகிறது
தீராவலி....