உதிரத்தின் உயிரோசையே...
மூன்று பத்துமாத அவஸ்தையில்
எங்களை பெற்றெடுத்தாய்...
வெளியுலகம் நாங்கள் தொட்ட
நாள் முதல்கொண்டு
வறுமையின் அரண்மனையிலேயே
பட்டத்துரானியாய் வாழ்கிறாய்...
புது உயிரின்
ஆதிமூலம் அதன் தாய் தான்...
கூலியே உன்குல வாழ்க்கை என
நாளொன்று விடுப்பு கொண்டால்
வாடிடுமே எங்கள் வயிறு என வருந்தி
வருடம் முழுவதும்
உழைக்கச் சென்றிட்டாய்....
பெண்மையின் சாயலில்
மூத்தவள் நான் மலரத் தொடங்கியதும்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திட்டாய்....
மறுகணமே மனம் சோர்ந்திட்டாய்..
மனம் முடிக்க பணம் சேர்ப்பதெப்படி என்றெண்ணி ...
கையாலாகா கணவனின்
உடல்நலம் பேணவும் உழைத்து உழைத்து
நோய்வாய்ப்பட்டிட்டாய் ...
விடுமுறைநாட்களில் மூத்தவள் நான்
உன் உழைப்பை என் கையில் ஏந்தினேன்...
என் இளையவனுக்கும்,
இளையவளுக்கும்
சேர்த்து படிப்பினூடே உழைக்க
ஊக்கப்படுத்திக் கொண்டேன்....
நோய்பிடி தாண்டிய நீ
மறுபடியும் உழைக்கச் சென்றிட்டாய்..
கிடைத்த நேரத்தில்
"நீங்கள் மூவரும் படித்து
நல்ல உத்தியோகம் செல்ல
உழைத்தே சாகிறேன் நான் மெல்ல..."
என அறிவுருத்திட்டாய்...
பொறுப்புணர்ந்து மூவரும் படித்திட்டோம்...
காலங்கள் ஓடியதில்
நல்ல நிலைமையில் மூவரும்...
என் இளையவர்கள் "முன் ஏரை
தொடர்ந்த பின் ஏராய்..."
துன்பம் பொறுத்த தாயை
கையில் ஏந்த முடிவெடுக்கையில்
"ஓய்வு எடுக்க நினைக்கையில்
உடலும், மனமும் இளைப்பாறலாம்
என்றுதான் எண்ணுகிறது...
ஆனால் ஓர்நாள் உழைப்பை நான்
நிறுத்தினால் என்னுயிர்
ஓய்வெடுக்கச் சென்றிடுமே...
என் பேரப் பிள்ளைகளின் வளர்ச்சி
நான் கண்ணில் காண
இப்பொழுது செல்கிறேன் உழைக்க...."
என்று பழைய சோறை
தூக்குவாளியில் எடுத்துக் கொண்டு
நடக்க ஆரம்பித்தாள்
அவளது பாதச்சுவடுகள் எங்களுக்கு
பிகாஷோவின் புகழையும் சேர்த்து வென்ற ஓவியமாய்...
No comments:
Post a Comment