Tuesday 4 March 2014

கனவுக் குழியில் நான்..


தாழாட்டும் நிஜத்தில்
தவழ்ந்து வரும்
மாய நிகழ்வுகளாய்
கனவுகள்…

என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது
நிலமில்லா இடத்தில்
தரை தேடும் தட்டான்கள்,
திசை அறியாது வீழ்ந்து
தரை தேடி வரும்
பனியின் மணித்துளி..

என்ன இது குழப்பமாய்..

அய்யத்துடன் அடுத்த வழி நோக்கி..

சட்டென்ற மாறலில்,
சிவப்பு ரத்தத்தை
போர்த்திக் கொண்ட வானத்தில்
திட்டு திட்டாய்
கருப்பு ஆயுதங்கள்
ஆவேச நடை போடும்
சிரமில்லா மனித முண்டங்கள்
கனவிலுங்கூட ஓர் ஜாதிக் கலவரம்..

அந்த குறுகலான பாதைக்குள்
மாற்றிக் கொள்கிறேன்
என் வழியை

சில்லரைத் தட்டுக்களாய்
சிதறி ஓடும் சிறுமிகள்
ஆடையற்ற உடலுடன்..
கேட்டால் அங்கு 
புணர்ச்சி என்பது
பாவச் செயலாம்..

என்ன கனவோ…
வழி திரும்பலாம்
என அடுத்த அடி வைக்கையில்
இலகுவான மண் பிசைவுக்குள்
மெல்ல மெல்ல சிக்கியது..

என் கால்கள்
அமிழ்கிறேன் அமிழ்கிறேன்
கை எட்டும் திசையில்
ஆலமர வேர் இருந்தும்
சிக்கி சிக்கி புதைய போகிறேன்..

என் அத்தியாயத்தின்
முடிவுரை இப்படித்தான் போல
என கண்ணீர் வடிக்கையில்,


பட்டான ஓர் பெண் கரம்
மெல்ல என்னை இழுக்கிறது
முகம் பார்க்க எண்ணுகையில்
என்னை வெளியில் தள்ளி விட்டு
ஓட எத்தனிக்கிறது

கொட்டிய இருட்டில்
பதித்து வைத்த 
நிலவாய் அவள் முகம்
கண்டுகொண்டேன்..

அன்று
சம்பிரதாயம் பார்க்கையில் 
சபித்து திட்டிய அந்த
வெள்ளை உடை கொண்ட
விதவைதான் என…

ச்சே.. மனித வாழ்வு எவ்வளவு 
புனிதமானது…
உணர்ந்து கொண்டேன்… 

நிஜம் திருத்தாத என்னை
நியாயமாய் திருத்தியது
அந்த கனவு
இன்றும் என் நினைவில்..

Thursday 19 September 2013

முத்த சிற்பங்களை....

முழு பெளர்ணாமியின்
வெளிச்சபொலிவை
முழுவதுமாய்
தேசிங்கு ராசனின்
காந்தக் கண்கள்
உள் வாங்கிய வண்ணமிருக்க,
அவன் கரங்களோ
எதிரில் நாணிவந்த
பாவையவளின்
கொடிஇடை பிடித்து இழுக்க, 
அன்றில் மலர்ந்த
விழி பூவில்
இதழ் இலைகள் கொண்டு
இதமாய் பதித்து வைக்கிறான்
காதலில் சொக்கிப் போன
முத்த சிற்பங்களை....
 

Wednesday 18 September 2013

உன் நினைவுகளோடு பசுமையோடு நான்...

நகரத்தின் பின்னலில்
தவித்துக் கொண்டு
கிராமத்துக் காதலியின்
நினைவுகளை காதலித்து
சுகம் காணும் 
மாமன் மகனே ...
ஓடும் நீரிலும்
உன் பெயரை
எழுதி ரசித்து
சூரிய கதிர்ககளில்
சுகம் கொள்ள
கனா காணும்
எனைக் காண
கண்ணிமை
சிமிட்டலுக்குள்
வந்து சேருவீராக...
பசுமை மாறா
உன் நினைவுகளோடு
பசுமையோடு நான்...

Tuesday 17 September 2013

உதிர்ந்து போன நான்....

தனிமையின் சிறகுகள்
இறுக்கி கொண்டிருக்கிறான
காலக் கொடூரன்
நகர்வத்தில் சூனியம் 
வைத்துக் கொண்டான் போலும்...
இருட்டின் தூறலில்
முழுவதுமாய் நனைந்து
விரக்தியின் தாககத்தில்
மெளனமாய் நான்...
இறை உண்ண வந்தவைகளாய்
என்னை தின்று தீர்க் கின்றன
வறுமை எறும்புகள்
பாறையில் முளைவிட்ட
நஞ்சு கொடியாய்
சுற்றி வளைத்து விட்டன
குடும்ப பொறுப்புகள்...
திணறி, பிதற்றி
துவண்டு வெம்பி
காற்று நீங்கிய
லோகமாய் வறண்டு போய்
உதிர்ந்து போன நான்....

Friday 23 August 2013

சந்தனத்தில் மலர்ந்தெழுந்த

அற்றை திங்களில் ஓர் நாள் 
அன்றில்மலர்ந்த முல்லைகளில்
வெளிபரவிய வாச மணம்
புரவி பூட்டிய பகலவானின்
பரந்து விரிந்த புஜங்களின்
மேல் திரவி வீச,
போர்த்திய மேகங்களில்
உதிர்ந்த தூறல்களுக்குள்
ஒளிவிடும் அம்புலியாய் 
எட்டி பார்த்து
அக மகிழ்ந்து ஆயாச காதலில்
திளைத்துக் கொண்டிருந்தாள்
சந்தனத்தில் மலர்ந்தெழுந்த
மங்கை அவள்...




Wednesday 21 August 2013

தேன் குடிக்க காத்திருந்த இதழ்களில்....

கம்மாலான மேகக் கூட்டங்களுக்கு மத்தியில்,
காதலனோடு கை கோர்த்தபடி ரயிலில், 
ஒரு நெடுந்தூர காதல் பயணம்....

ரம்மியமான பொழுதில் 
கரிச்சான் குருவிகளின் 
மகிழ்ச்சி சப்தத்தில் 
அவன் அழகின் கதகதப்பில் 
சாய்ந்ததவாறு தொலைதூரம்
பயணிக்க தயாரக்கிக் கொண்டேன் என்னை...

எனைக் காண வந்த வான வில்லும் 
பொறாமையில் பொசுக் என முகம் காட்டியது.

குளிர் அதிகமாய் என்னை தாக்க ஆரம்பிக்க
அவனின் அரவணைப்பிற்குள்
அதிகமாய் என்னை இறுக்கி கொள்ள 
வசதியாய் அமைந்து போனது....

இமையோரமாய் கண்டவன் 
எதையோ சொல்ல எத்தனித்து 
ஏதும் சொல்லாமல் 
ஒரு கல்ல சிரிப்பை மட்டும்
உதிர்த்துக் கொண்டான்

அதன் காரணம் அறிந்துகொள்ள
எனக்கு தோன்றவும் இல்லை 
முற்படாவும் இல்லை...

இருவர் மட்டுமிருந்த
அந்த பிரயாண வகுப்பில்
தனிமையை விரட்டி விட்டு
ஆனந்த தாண்டவம் 
ஆடிக்கொண்டிருந்தது
காதலோடு காதல்...

மெல்லிருட்டும் கவ்வ ஆரம்பிக்க
மிளிர்தான வெளிச்சத்தில் 
அவன் மார்பில் புதைந்திருந்த
என் முகம் நிமிர்த்தி,

நெற்றியில் படர்ந்திருந்த 
அலை கேசத்தை நீக்கிவிட்டு
காதல் ததும்பி துடித்த
கண்களின் மேல் மந்திர முத்தம் ஒன்றை
இட்டு வைத்தான்...

மெய் மறக்க ஆரம்பித்தத்தில்
உணர்வுகள் மொத்தமாய்
ஒன்று சேர்ந்திருந்தது 

பெற்றோரின் பாசம் மட்டும்
பெற்றிருந்தவளுக்கு
முதன் முதலாய்
ஓர் ஆண்மகனின் அருகாமை
தேகம் சார்த்த ஸ்பரிசம்...
அதன் மீதான நேசம்...

ஏதும் சொல்ல இயலாமல் 
இருத்துளி கண்ணீர் மட்டும் விரயம் ஆனது

பதறிய அவன்,
"ஏனடி அம்மு...
உயிரை கரைக்காதே
உன் கண்ணீரால்///

வாழும் ஒரு வாழ்க்கையும் 
உன்னோடு மட்டும்தான் 
உனக்காக மட்டும்தான் என்றான பிறகு 
எதற்கடி வீணடி த்தாய் 
என்னுயிரின் துளிகளை..."

என உரைத்த மறு நொடி
பொங்கி எழுந்த உணர்வுகளின் வேகத்தில்
அன்றில் மலர்ந்த அழகிய காதலனின் 
தேன் குடிக்க காத்திருந்த 
இதழ்களில் 
பதித்து வைத்தேன்
“நச்” என்ற  முத்தம் ஒன்றை...

சினப்படு... சினந்தெழு... சினத்து வீசு....

நாற்றிசைகளிலும் எறிகுண்டுகளால் 
நாளொரு தினமும்  உன் இனம் அழிய,
கால் உயிரும் கடை உயிருமாய்
அல்லோலப்பட்டு அடிமை படுத்தப்பட்ட 
ஈழ சகோதர சகோதரிகளின் வேதனையின் உச்சத்தில்
குதூகலித்து கும்மாளமிடும்
காமன் வெல்த் கேட்கிறதோ...?
எகத்தாளம் செய்து எடுக்கப் பட்ட
திரைப்படம் பார்த்து பூரிக்க வேண்டுமோ...?
அறுத்தெறிய வேண்டும்
இந்த அலங்கோலங்களை…

ரத்தம் கசிந்து கொண்டிருக்கும்
ஈழ பூமியில் 
ஈரமே இல்லாமல்
நம்மினத்தவர்களின் உயிர்களை தகர்த்தெறிந்தவர்களை 
வேரருக்க வீறு நிறைந்து
வேட்கை பருகி
வீர கர்ஜனையொடு யோ
சிலிர்த்தெழு தமிழா...!!

பீனிக்ஸ் பறவைக்கூட 
வெப்பத்தை வென்று 
சினம்கொண்டு மாற்று அவதாரம் புரிகிறது,

சுட்டு பொசுக்கும் தீப்பிழம்பின் உக்கிரத்தில் 
பால் கூட வெகுண்டு – வழிந்து ஓடி
தீ அணைத்து சினம் ஆற்றுகிறது,

கொங்கு தமிழின் சாராம்சம் 
ஓங்கி எழ,

தமிழ் இனம் போற்ற பட



சினப்படு...
சினந்தெழு...
சினத்து வீசு....

சினந்து எழும் காற்றும்
புயலாகும்போது 
பொங்கி எழுந்த நீ
பெரும் போராளியாய் 
கனல்வீசு
வீராவேசத்துடன்...

விடுபடட்டும் நம் இனம்
விடுதலையாகட்டும் நம் குலம்...
புறமுதுகு காட்டா நாம் வீரம்
செருக்கோடு வாங்கி தரட்டும் தமிழ் ஈழத்தை...
களம் கண்டு வெற்றி சூடடா…
கர்வத்தோடு சொல்கிறேன் அப்பொழுது 
“தமிழா நீ என் இனமடா”

                              - தீபா வெண்ணிலா