Friday 19 April 2013

குடும்ப பாரம்...

 
சிறுபிள்ளையென
சிறகடித்து பறந்தவள் மீது
பாறாங்கல்லென
சுமத்தப்பட்டது
குடும்ப பாரம்...

உடன்பிறப்புகளின் படிப்பு,
அப்பாவின் பீடி செலவு,
அம்மாவின் மருத்துவ செலவு,
தன் திருமணத்திற்கு
தேவை இல்லாமல் சேர்க்கும்
நகைக்கான தண்ட காசு
என பெரும்பட்டியலாய் நீளும்
குடும்ப தேவையினம் கண்டு
ஒரு நொடி சுவாசமே
மூச்சு வாங்கியது...

தன்னுடைய தேவையை சுருக்கினால்
மாறுமே இவை நிறைவேறும் என
அடிப்படை தேவையையும் கொண்டாள்...

காலத்தின் போக்கில்
கவலைகளேதுமின்றி
களிப்புற்றிருந்தவள்
இன்று கடின உழைப்பின்
கோரத்திற்குள்
கட்டுண்டு கிடக்கிறாள்...

இளமையின் வீம்பில்
எகிறித்துடித்து
அலைபாய்ந்த மனதினை
அடக்குவதற்கு
அல்லோலப்பட்டு
அவதியுறும் அவளிடம்
விளையாட்டான வாழ்க்கை
விதிர்த்து துடிக்கிறது....

இன்பம், இளமை
துன்பம், துடிப்பு
சோகம், சுகம்
கோபம், கரிசனம்
அழுகை அரவணைப்பு
பாசம், பந்தம்
என பல உணர்ச்சிகளை
தன்னோடு சேர்த்து
தொலைத்து விட்டிருந்தவள்
அப்பொழுது தான்
உணர ஆரம்பித்தாள்
கால சக்கரத்திற்குள் சிக்கி
முழுவதுமாய் நைந்து போயிருந்ததை....

மிச்ச மீதி கூறுகளை
திரட்டி வைத்து
ஒருங்கே அமைந்தவள்
வெளி நோக்கையில்தான்
உணருகிறாள்
தான் முதிர்ந்துவிட்டிருந்ததை....

(தீபா வெண்ணிலா )

2 comments: