Thursday, 6 September 2012

கி.பி.2500 ஆம் ஆண்டில்....

வேலி சூழ்ந்த வீடுகள்....
வீட்டை சுற்றிலும் மரங்கள்...
மரத்தடியில்
பால் குடிக்கும் கன்றுக் குட்டி
அதனை நாவால் வருடிக்
கொடுத்தபடியே நின்று ரசிக்கும்
தாய்ப் பசு...
துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த
ஆட்டுக் குட்டிகள்...
அமைதியாய் இழை தழை
உண்ணும் இணை ஆடுகள்...
கொக்கரித்தபடியே கொடூரக்
கழுகினிடம் இருந்து தன்
குஞ்சுகளை தன்சிறகுள்
பாதுகாப்பாய் வைத்துருக்கும் கோழி...
ஈரத்தலையில் துணிசுற்றி
ரசித்துக்கொண்டே கோலம்
போடும் கன்னிப் பெண்...
சாம்பலிட்டு பாத்திரம்
துலக்கிக் கொண்டிருந்த பாட்டி...
விறகு அடுப்பினில்
தனல் ஊதிக்கொண்டிருந்த
நடுத்தர வயதுப் பெண்மணி...
அத்தனை காட்சிகளும்
அருங்காட்சியகத்தில்
நேரடியாகப் பார்ப்பது போலவே
புகைப் படத்திலும் இருந்ததை
தன் பேத்திக்கு விளக்கி
சொல்லிக் கொண்டிருந்தாள்
அந்த மூதாட்டி...
கி.பி.2500  ஆம் ஆண்டில்....

No comments:

Post a Comment