Friday 21 September 2012

வாழ்ந்து முடித்துவிட்டாள்...





மனம் அறிந்த
மணாளன்...
அன்பின் உருவான
மாமியார்...
பாசம் கொட்டும்
மாமனார்...
விட்டுக் கொடுக்காத
கொழுந்தன்கள்....
உடன்பிறப்பாய் பழகும்
அக்காக்கள்...
உயிராய் பழகும்
நண்பர்கள்....
துள்ளிக் குதித்து
வரும் மழலைகள்...
சிறப்பான குடும்பம்...
அழகான வாழ்க்கை...
அடி எடுத்து வைக்கையில்
இடையூறாய்
ஜாதி...
மனம் பொருந்தி விட்டபின்
பொருந்தவில்லையாம் ஜாதகம்...

"முகம் தெரியாத ஜோசியக் காரனின்
பேச்சை நம்பும் பெற்றோர்கள்
ஏனோ தான் வளர்த்த பிள்ளைகளின்
மேல் நம்பிக்கை அற்றுத்தான் போய்விடுகிறார்கள்
சில முக்கியமான நேரங்களில்...."

நிம்மதியான வாழ்க்கையை விட
சாதியோடு அழிந்து போகும்
வாழ்கைக்கு வழி வகுக்கிறார்கள்
அவளின் குடும்பத்தார்கள்...
அவளோ மனதிற்குள்
வாழ்ந்து முடித்துவிட்டாள்
தன்வாழ்க்கையை
அந்த எளிமையான,
எதையும் எதிர்பாராத
இயற்கைகாதலனின்
குடும்பத்துடன்....

Wednesday 19 September 2012

சுந்தர பாண்டியன்


ஒரு அழகான கிராமத்துக் காதலையும், வலிமையான நட்பின் ஆழ்ந்த வரிகளையும் உள் கொணர்ந்து சொல்லப் பட்டிருக்கின்ற எளிமையான, நல்ல படம்.. மீண்டும் பார்க்கலாம்...
=## நானும் 2 முறை பார்த்திட்டேன்.... ஜாதியை மைய்யப் படுத்தி இருப்பதை தவிர்த்து, புரட்சியாக சொல்லி இருந்தால்  இன்னும் அருமை என்று சொல்லி இருந்திருப்பேன்... 

Monday 17 September 2012

கள்ளிக் காட்டு காதல்...


கள்ளிக் காட்டில்
சுள்ளி பொறுக்கும்
சாக்கு சொல்லி,
உன்முகம் காண
ஓடிவந்தேன் துள்ளி...
நாழி கரைய ஏனோ
நீ இன்னும் புலப்படவே இல்லை...
கருவை மரங்களும்
"களுக்" என சிரித்தது
நான் தனித்த நிலை கண்டு...
மழை தாங்கிய மேகமாய்...
நீறு பூத்த நெருப்பாய்...
சோகம் தாங்கிய மனதோடு
கலங்கிய வீசிய காற்றில்
கொஞ்சமாய் கலந்து புழுதியோடு சேர்ந்து
உன்னைத் துழாவினேன்...
கிடைத்தபாடில்லை...
பாறாங்கல் தாங்கிய நெஞ்ச அலைகளோடு 
சுள்ளி எடுக்காமலே திரும்பிய என் கண்முன் 
கத்திவீசும் பார்வையோடு 
அருகில் வந்து ஸ்பரிசம் நெருங்க 
அணைக்கும் ஆசையில் 
அருகில் நின்றிட்டாய்...
குத்தினேன் கோபத்தில்
உன் நெஞ்சில்
என் கையால்
வலிக்காத மென்மையோடு...
"பிரிந்து போன உயிர் மறுபடி
வந்தமர்ந்தது போலுள்ளதடா 
நீ வந்து சேர்ந்த இந்த பொழுது...
மீண்டும் சென்றால் வரவே மாட்டேன் 
என்று உறுதி சொல்லிவிட்டதடா இந்த உயிர்..."
என ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்த என்னை,
கை தொட்டு
விரல் பிடித்து
நெட்டிதனை பறித்திட்டாய்..
சோகம் மறைந்து
இன்பமாய் பிறந்த 
காதல் வார்த்தைகளோடு 

கதைத்தோம்...
ரசித்தோம்...
ருசித்தோம்...
புசித்தும்விட்டோம் அந்த பொழுதை...
நேரம் கரைய சூரியன் உறங்க
விலகாத உள்ளத்தை உன்னோடு விட்டுவிட்டு
வெறும் கூடாய் திரும்பி போக எத்தனித்தேன்..
"சுருக்" என நெருஞ்சி முள்ளாய்த் தைத்தது 
சுகம் மறைந்த அந்த பொழுது..
விலகப் போன 
வளையல் ஆடிய என் கை பிடித்து 
 தவழ்ந்து வந்த கன்ன முடி ஒதுக்கி வைத்து
கலங்கிய கண்கள் பார்த்து
இறுதி மூச்சை தக்க வைத்தாற்ப்போல்
இருந்த மூக்கைத் தொட்டு
மரணத் தருவாயில் துடிப்பது போன்ற இதழில் 
கல்வெட்டு முத்திரையை
முத்தம் ஒன்றை செதுக்கிட்டாய்...
உனைவிடுத்து
கவலைதோய்ந்த உன் முகம் பார்த்து
"அரைகுறையாய் செதுக்கிய சிலையாய்
மாறிவிட்டேன்...
மீண்டும் வருவேன் தினம் ஒருமுறை ...
முழு சிலையாய் நீ செதுக்கி முடிக்கும்வரை ..."
நீரில்லாமல் நொடியில்
பூத்தது புன்னகை...

 
கள்ளிக் காட்டு காதல்...

Saturday 15 September 2012

காத்திருக்கிறாள் கருவாச்சி.....

வேகத்தை 
புறம்தள்ளி,
புரவியை 
சுண்டி விட்டு,
நிலவின் 
ஒளிகொண்டு,
வேகமாய்
வந்துகொண்டிருக்கும்
அழகு வீர
மச்சானின்
முகம் பார்க்க..
காத்திருப்பின்
துணையோடு,
ஏக்கத்தின் 
உந்துதலோடு,
வரும் வழி
தடம் நோக்கி
கண் ஒளியை
வீசிய வண்ணம்
வாசலிலே 
காத்திருக்கிறாள்
இந்த கருவாச்சி.....



Friday 14 September 2012

கஞ்சியும் அமிர்தமாய்....

கருப்பு வண்ண சேலை கணுக்கால்வரைக் கட்டி,
முகச் சாயம் நீக்கி,
கரும் மை கண்ணில் இட்டு, 
கை வளையல் குலுக்கி, 
ஒற்றைத் தூக்கு வாளியிலே 
என் மச்சானுக்கு கஞ்சி
கொண்டு போகையிலே,
வழிநெடுகிலும் அவன் முகமே... 
வியர்வை துடைத்து 
அருகில் வந்து 
"என்னடி கருவாச்சி..." 
என்று கொஞ்சம் தெரிந்த
இடுப்பினிலே "நறுக்" என கிள்ளிட்டான்... 
கஞ்சி குடித்தவனை 
சித்துக் கொண்டிருந்த 
அற்புதமான தருணத்தில், 
எதிர்பாரா நொடியில்,
கஞ்சியோடு சேர்த்து இதழ் முத்தம் ஒன்றை பதித்திட்டான் ... 
கஞ்சியும் அமிர்தமாய்
என் இதழில்....

கருவாச்சியின் பொன்னான நேரம்...

"காதலிக்க நேரமில்லை...
காதலிப்பார் யாருமில்லை"
என்ற வரிகளைப்
படித்து வீணடிக்கிறான்
இயற்கையின் காதலன்....
அணுஅணுவாய்,
நொடிக்கு நொடி
அவனுக்கே தெரியாமல்
அவனைக் காதலிக்கிற
கருவாச்சியின்
பொன்னான நேரத்தை...

"மச்சான்,,,"

இதென்ன விபரீதம்...
போதை வஸ்து
எதுவும் இன்றி
இத்தனை கிறக்கம் என்னுள்...
அதுவும் ஆசையாய்,
மனதிற்குள்
செல்லமாய்,
சொன்ன அந்த
சின்ன வார்த்தையிலே...
இத்தனை சக்தியா
அந்த வார்த்தைக்கு...
என்னவனை
"மச்சான்,,," என்று
சொல்லிப் பார்த்ததும்..

அழகு தமிழ்......

அருமையான, நிகரற்ற  சொல் பொருள் வளம், இலக்கண இலக்கிய நயம் வேறு எந்த மொழியிலும் காண முடியாத ஒரு தனித் தன்மை பெற்று சிறந்து விளங்குவது நம் தமிழ் மொழியே... இருந்த போதிலும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த நாகரீக கால கட்டத்தில் நம் தாய் மொழியான தமிழை பேசுவதில் நம்மில் பலரும் முனைப்புடன் இருப்பது இல்லை... ஆங்கிலம் பேசுவதுதான் அழகு என்று எண்ணுபவர்களே... நம்முடைய மொழி தெரியாத அந்நியர்களுக்கு கருத்து பரிமாற்றம் செய்ய அதை பயன்படுத்தலாம். அதோடு சரி... தெரிந்து கொள்ளுங்கள் ஒன்றை... அழகிற்காக பேசும் ஆங்கிலம்  ஒரு அறிவுதான்... அது மொழி கிடையாது... மற்ற நாடுகளில் அவரவர் தாய் மொழியைத் தான் முதலில் தன் குழந்தைக்கு பயிற்றுவிக்கின்றனர் பெற்றோர்கள்.. ஆனால் நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்த குழந்தை பேச ஆரம்பிப்பதற்கு முன் "அம்மா" என்று அழைக்க சொல்லிக் கொடுக்காமல் "மம்மி சொல்லுடா செல்லம்" என்று அங்கலாய்க்கும் தாய்மார்கள் இல்லாமல் இல்லை.. தமிழர்களிடையே தற்சமயம் அனைத்து தமிழ் சொற்களும் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து கொண்டிருக்கிறதே... இப்படியே போனால் இன்னும் அறுபது ஆண்டுகளில் தமிழ் மொழி தடம் தெரியாமல் அழிந்து விடுமோ என்ற பயம் அவசரமாய் வந்து சூழ்ந்து விடுகின்றது.  சில தமிழ் சொற்களை சிரிப்பு தரும் நிகிழ்ச்சிக்கு பயன்படுத்துவதைக் கண்டு வருத்தப் படுவதா..? சிரிப்பதா...? இந்த மாதிரி நிகழ்சிகளை விட நாம் நம் தமிழ் மொழியை தெளிவாகப் பேசினாலே வித்தியாசாமாய் நம்மைப் பார்க்கும் இந்த மக்களை நினைத்து, அவர்களின் போக்கை எண்ணி சிரிப்பதா..? வருத்தப் படுவதா...? கோவப் படுவதா...? இதிலும் ஆங்கிலத்தில் பல சொற்களுக்கு நிகரான சரியான தமிழ் சொல் தெரியமாலே இருக்கும் மக்களை நினைத்து என்ன செய்வது... வளரும் இளம் சமுதாயம், வளர்ந்து கொண்டிருப்பர்வர்கள் நம் தமிழ் மொழியின் வளர்ச்சியினை கையில் எடுத்தாலேயொழிய நம் தமிழ் மொழி அழியாமல் உயிர் பெற்று புகழ் நாட்டி நிற்கும் ... 



Thursday 13 September 2012

மணிமகுட மன்னனாய்....

ஒளி குன்றா வைரமாய்
என் உயிர் திரட்டி
கை கொண்டு தாங்கி
உன் கிரீடம் சூட்டி
அலங்கரித்து
என் இமைச் சாமரத்தால்
உன் வியர்வை துடைத்து
என் மன நாட்டில்
செங்கோல் கொண்டு
அரசாள்வாயாக
மணிமகுட மன்னனாய்....
என் உயிர் காதலனாய்...

அவன் ஸ்பரிசம் தீண்ட...

கனவினில் மட்டுமே கண்டிருந்த
கவிதையின், இயற்கையின்
ஆசையின், காதலின் காதலன்
சப்தமே இல்லாமல்
தூரத்தில் நின்று
என் வருகையை கவனித்தான்
என எண்ணுகையில்
மரத்துப் போன செல்களுக்கும்
மறு உயிர் கிடைத்து
தேரில் ஏறிப் பறந்து
சென்று கொண்டிருந்தது
அவன் ஸ்பரிசம் தீண்ட...

கிடைத்துவிட்டான் ...

கிடைத்துவிட்டான்
கருவே இல்லாமல் 
பிறந்த என் கவிதைகளின்
கண் மூடித்தனமான
அன்பை அபகரித்துச் சென்ற
கவிதைகளின் காதலன்...
இனி நொடி தாமதியாது
அசுரவேகத்தில் பிறக்கும்
அவனுக்கான 
என் கிறுக்கல்கள்...

திருட்டுக் கள்வன்...

என் அடி தொடர
பாத ஓசை
சப்தம் திருட
கொலுசு வாங்கி
பரிசளித்த
திருட்டுக் கள்வன்
இந்த கருவாச்சியின் காதலன்...


"கருவாச்சி"

வெள்ளை உடையில்
வந்த என்னை
"தேவதை" என்று
புகழாரம் பலர்
கொடுத்தபோதிலும்
நான் என்றும் அடிமை...
செல்லமாய்  சிணுங்கலாய்
அவன் சொல்லும்
அந்த ஒற்றை வார்த்தைக்கு
"கருவாச்சி"

Wednesday 12 September 2012

அண்ணனோடு நான்...

அலை வீசும்
கடற்கரையில்
கதை பேசும்
காதலர்களுக்கு
மத்தியில்
விதிவிலக்காய்
என் அண்ணனோடு நான்...
மகிழ்ச்சியான தருணத்தில் ஒருநாள்...

தனிமையில்...


பரபரப்பான இந்த
சென்னை வாழ்கையில்...
கடலோரக் கரையில்
அலைகளின் ஆர்ப்பரிப்பில்...
வண்ண விளக்குகளின்
அலங்கரிப்பில்...
மின்னிக் கொண்டிருந்த
கட்டிடங்களைப்
பார்த்தவண்ணம்
இதமாய் வீசிய
கடற்காற்றை
ரசித்தபடியே அமர்ந்திருந்தேன்
என் இயற்கைக் காதலனின்
நினைவலைகளை நெஞ்சில்
அணைத்தவாறே
தனிமையில்...

"நன்றி இயற்கையின் சொந்தங்களே...."

நான் வடித்த கவிதைகளின்
உணர்வு வெளிப்பாட்டில்
மயங்கி தன் நிலை மறந்த
நகரத் தொடங்கிய மரம்,
தரைமேல் எழுந்த மண்,
மண்ணுலகம் பயணிக்கும் வானம்,
உவர்ப்பை நீக்கிய கடல்,
குளிர்ச்சியாய் ஆன சூரியன்,
குவிந்து அடங்கிய காற்று,
எழுந்து நின்ற நீர்,
நேர்வழியில் உருண்டு வந்த கோள்,
தன் குரல் மறந்த குயில்,
ஆட மறந்த ஆண் மயில்,
வேட்டை மறந்த சிங்கம்,
துள்ள மறந்த மான்,
வேகம் மறந்த குதிரை,
திசை தொலைத்த திசைக்காட்டி,
வண்ணம் தொலைத்த வண்ணத்துப் பூச்சி,
மகரந்த சேர்க்கை செந்தூரப்பூ,
ஒட்டு மொத்த இயற்கை குடும்பத்தினரும்
"எங்களை விட தனித்திறமை வாய்ந்தவனா
உன் இயற்கைக் காதலன்..?"
என்று என்னிடம் வந்து முறையிட்டன...
அவனின் முகம் பார்த்ததும்
அந்த வசீகர ஒளியில்
அவனையே தங்களின் தலைவனாக ஏற்று
என்னை பெருமை படுத்தி
"நீ கொடுத்து வைத்தவள்...
அடி கிராமத்துக் காதலி...
அடுத்த வாழ்க்கையில்
நாங்கள் உன்னுடைய
இயற்கைக் காதலனாகவே
பிறக்க காத்திருக்கிறோம்"
என்று என்னை வாழ்த்திச் சென்றன...
மனதில் சொன்னேன்...
"நன்றி இயற்கையின் சொந்தங்களே...."

கொன்று புதைக்க...


அவசரத்தின்
முதுகில் ஏறி
விரைந்து சென்றாள்
வீராவேசத்துடன்
கிராமத்துக் காதலி...
என்றோ ஒருநாள்
தன் இயற்கைக் காதலனை
தொட்டு ரசிக்கவரும்
மரணத்தை
கொன்று
குழி தோண்டி புதைக்க...

Tuesday 11 September 2012

நேற்று இரவில்...

உச்சி முகர்ந்து கொண்டிருந்தேன்
புதுவரவாய் வந்த
அந்த பிஞ்சுவின்
பஞ்சு கைகளை...

சூழலின் உஷ்ணத்தில்
கண் திறக்காமல்,
உதடு பிதுங்கி,
விரல் அசைத்து,
கால் உதைத்து,
மெல்ல தன் கழுத்தை
மெதுவாய் சுனக்கிய
அந்த ஆரமுதுவின்
அழகில் ஸ்தம்பித்துப் போய்
அமர்ந்துவிட்டேன்
அந்த அழகின் வசத்தில்...

ஒரு கணத்தில்
ஒட்டு மொத்த
மகிழ்ச்சியும்
துள்ளிக் குதித்து
ஓடி வந்து
கட்டி அணைத்துக் கொண்டது என்னை
அந்த பிஞ்சு முகம் பார்த்ததில்....

அவனின் முனகல்களைக் கேட்டதும்
ஒட்டு மொத்த
பிரச்சினைகளும்
தவிடு பொடியாகிப் போனதைப் போல
ஓர் உந்துதல்....

இதைத் தவிர
பெரிய சந்தோசம்
ஓன்று இந்த உலகில்
இருந்ததை
எனக்குத் தெரிய வில்லை...

அந்த பிஞ்சு குழந்தை
தூங்கிய அழகை
ரசித்தவாறே
நானும் தூங்கச் சென்றேன்
நேற்று இரவில்...

Monday 10 September 2012

என்னைப் போல்...

என் இயற்கைக் காதலனை
கொஞ்ச வந்த
மழை கண்டு
ஆழ்ந்து போனேன் பூரிப்பில்....
விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது
அவனுடைய அழகான
வருகையை எதிர்நோக்கி
என்னைப் போல்...

கிராமத்துக் காதலி...

"ஏய்... கருவாச்சி...."

செத்து விட்டேன்
அந்த நிமிடத்தில்....
காது முடி நீக்கி
மீசை முடி உரச
முத்த இதழ்கள் தீண்ட
ஸ்பரிச வெப்பம் கொண்டு

செவியோரம் செல்லமாய்
சொல்லிய அவனின்
ஒற்றை கொஞ்சல் வார்த்தையில்
"ஏய்... கருவாச்சி...."

இப்பொழுது மீண்டும்
சாகப் போகும்
நிமிடத்திற்காக
காத்திருக்கிறேன்...

- கிராமத்துக் காதலி....

கோவிந்தம்மாள் பாட்டி


எங்கு பார்த்தாலும்
பசுமையான புல்வெளிகள்...
ஓங்கி உயர்ந்த மரங்கள்....
சலசலத்து ஓடும் ஆறுகள்...
மழையென கொட்டும் அருவிகள்...
இயற்கையின் வாசம் மட்டுமே
வீசிக் கொண்டிருக்கும்
ஆள் அரவமற்ற
அமைதிப் புயல் வீசிக்கொண்டிருந்த
எழில் மிகு கிராமத்தினிலே...
நாள் முழுதும் உழைத்த களைப்பில்
மெல்ல மெல்ல தளர் நடை போட்டு
பகலவன் உறங்கச்
சென்று கொண்டிருந்தது....

செங்கோல் ஏற்று
அரியாசனையில் அமர்ந்து
சந்திரன்
ஆட்சி புரிந்து
கொண்டிருந்த பொழுதிலே...
குடும்பத்தினர் அனைவரும்
வீட்டு வெளியில்
சந்திரனின் துணையில்
அமர்ந்திருக்க,
சூடான உணவு நடந்து
கொண்டிருந்த வேளையிலே...

பால் நிலாவின் முகம் காட்டி
தன் பேரப் பிஞ்சுகளுக்கு
உணவூட்டி
அதனூடே அவர்களுக்கே
உரித்தான பாணியில்
இரவுக் கதைகளை
இன்னிசையோடு
அரங்கேற்றிக்
காட்டிக் கொண்டிருந்தாள்
கோவிந்தம்மாள் பாட்டி...

கதைகளின் சுவாரசியத்தில்
தன்னை கட்டிப் பிடித்தவாறே
மெய் மறந்து
உறங்கி விட்ட
பேரக் குழந்தைகளை
அணைத்தவாறே
தானும் கண்ணயர்ந்தாள்...

அயர்ந்து போன சந்திரன்
உறங்கச் செல்லுகையில்
தன் துயில் நீக்கி
தாவி எழுந்தாள்
கோவிந்தம்மாள் பாட்டி
ஒரு வித இன்பத் துள்ளலோடு...

துள்ளி எழுந்த
மறுகணமே
துவண்டும் போனாள்...

வெளிநாட்டிற்கு
வாக்கப்பட்ட
தன் மகனின்
நிழல் நம்பி வந்து
ஏமாற்றமாய்,
நவீன வசதிகளோடு
மன நிம்மதியை
புதைத்துக் கொண்டிருந்த
ஓர் அறையில்
"என்றாவது ஓர் நாள்
தன் பேரப் பிள்ளைகளோடு
அழகிய கிராமத்திற்கு போய்
நிலா காட்டி
உணவூட்டுவதாய்"
எண்ணிய தன்
மனக் கனவினை நினைத்து...

Saturday 8 September 2012

கட்டிளங் காளை....

எனை மிஞ்சிய உயரம்...
கவி பாடும் கண்கள்...
அணைக்கத் துடிக்கும் இதழ்கள்...
கதைபேசும் குறுந்தாடி...
வீரமான உடல்வாகு...
முத்தம்பதிக்க ஏற்ற கன்னங்கள்...

அனல் வீசும் மூச்சு...
தணல் தோற்கும் பேச்சு...
இனியும் எப்படி சொல்வேன்
அவனின் ஆளுமையையும்
அழகையும்...
திகைத்துப் போய்
விஞ்சித்து நின்ற என்னை
வென்றது வார்த்தைகளே...
இருந்தபோதிலும்
கற்றுக் கொண்டேன்
கட்டிளங் காளையை
கட்டிப் போடும்
சூட்சமத்தை...
எப்பொழும் அவனின் காதலியாகவே
எதிர்நோக்கிக் காத்திருப்பேன்
அவனை கட்டி அடக்க...

Friday 7 September 2012

அவனுக்கான காதல் கவிதை....

நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாயும்
வளர்ந்து கொண்டிருக்கிறது
அவனுக்கான 
காதல் கவிதைகளும்...
அவனை எண்ணிவாடும்

என் மனப் பிணியும்...
அவன் நினைவுகள் 

மட்டுமே தேங்கி கிடக்கின்றன...
இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை

அவனும், அவன் வசமிருந்த என் உயிரும்....

சிப்பியையே உருவாக்கும் கடல் அவன்...

மூடிய சிப்பிக்குள் இருக்கும் 
முத்து இல்லை அவன்...
சிப்பியையே உருவாக்கும்
கடல் அவன்...
நெருக்கமானவன்
அடர்த்தியானவன்
ஆழமானவன்
அமைதியானவன்
அழுத்தமானவன்
கட்டுக்கடங்காதவன்
அவனுக்கு
பிறரின் கவிதைகளை 
அனுப்ப மனம் இல்லை....
நானே அவனை எண்ணி 
கவிதை எழுத முற்பட்டேன்....
முயற்சியும் செய்தேன்...
ஏன் அவனையே கவிதை ஆக்கினேன்...
கவி பாடவும் ஆரம்பித்துவிட்டேன்....
நெஞ்சில் நீங்கா
வாழும் நினைவுகளின் ஊடே
அவனின் சிறு புன்னகை 
என்னை பார்த்தது....
ஏக்கமாய் நானும் புன்னகை பூத்தேன்
அவனின் வருகை உறுதி என்று....

Thursday 6 September 2012

கி.பி.2500 ஆம் ஆண்டில்....

வேலி சூழ்ந்த வீடுகள்....
வீட்டை சுற்றிலும் மரங்கள்...
மரத்தடியில்
பால் குடிக்கும் கன்றுக் குட்டி
அதனை நாவால் வருடிக்
கொடுத்தபடியே நின்று ரசிக்கும்
தாய்ப் பசு...
துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த
ஆட்டுக் குட்டிகள்...
அமைதியாய் இழை தழை
உண்ணும் இணை ஆடுகள்...
கொக்கரித்தபடியே கொடூரக்
கழுகினிடம் இருந்து தன்
குஞ்சுகளை தன்சிறகுள்
பாதுகாப்பாய் வைத்துருக்கும் கோழி...
ஈரத்தலையில் துணிசுற்றி
ரசித்துக்கொண்டே கோலம்
போடும் கன்னிப் பெண்...
சாம்பலிட்டு பாத்திரம்
துலக்கிக் கொண்டிருந்த பாட்டி...
விறகு அடுப்பினில்
தனல் ஊதிக்கொண்டிருந்த
நடுத்தர வயதுப் பெண்மணி...
அத்தனை காட்சிகளும்
அருங்காட்சியகத்தில்
நேரடியாகப் பார்ப்பது போலவே
புகைப் படத்திலும் இருந்ததை
தன் பேத்திக்கு விளக்கி
சொல்லிக் கொண்டிருந்தாள்
அந்த மூதாட்டி...
கி.பி.2500  ஆம் ஆண்டில்....

இயற்கையின் காதலன்...

இதென்ன அதிசயம்...
இந்த காலைப் பொழுதில் மட்டும்
இந்த பூமியே புத்தம் புதிதாய்க்
காணப்படுகிறதே...

அதோடு என் தோட்டத்தில்
குவிந்த மொட்டுக்கள் அனைத்தும்
இதழ் திறந்து இன்னிசை
கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றனவே...

பூத்துக் குலுங்கிய பூக்களும்
அதிவிரைவாய் தங்களின்
அழகை மெருகேற்றுவதில்
மும்முரம் காட்டிக் கொண்டிருக்கின்றனவே...

அதி மலர்ச்சியாகவும்
கண்களுக்கு குளிர்ச்சியாகவும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வண்ணப் பூக்களும்
புத்தாடை அணிந்து
யாருடைய வருகைக்காகவோ
எதிர்நோக்கி காத்திக் கொண்டிருக்கின்ற
நிலை கண்டு
ஆச்சர்யத்தில் அமிழ்ந்து போய்
திகைத்து நிற்கையிலே
ஒற்றைப் பனித்துளி
சுமந்த சிவப்பு ரோஜா
அதன் இதழ் குவித்து
என் காதருகினில் வந்து
கட்டளையிட்டது...

" அவன் நிழல் பட
நான் பூத்துவிட்டேன்...
இன்று அவன் இதழ் தொட
என் இதழ் விரித்து
காத்திருக்கிறேன்
காத்திருப்பது நான் மட்டுமல்ல
அவன் ஸ்பரிசமும்
நிழலும் பட்ட அனைவருமே...
இங்கிருந்து சென்று விடு...
உன்னை அவன் தரிசிப்பதற்கு முன்
அவன் கரிசனம் நாங்கள் பெற்று விட..."
என்றது...

வெளியேறி விட்டேன்
அவைகளின் மகிழ்ச்சிக்காக...

அதோ தூரத்தில்
வந்து கொண்டிருக்கிறான்
என் உயிர்க் காதலன்....
இல்லையில்லை...
இயற்கையின் காதலன்...