Saturday, 27 October 2012

இரண்டு முக இந்தியா...





மழை தாங்கிய மேகமாய் வானம் இருக்கையில் மழை வரலாம் அல்லது பொய்த்தும் போகலாம். அந்த சமயம் வெளியில் செல்லுகையில்  குடை எடுத்து சென்றால் மழையில் இருந்து தப்பிக்கலாம், இல்லை நனைந்துதான் வரலாம்… இது ஒரு நிகழ்வின் சாதரணமான இரண்டு நிலைகள். வாழ்க்கையின் நிகழ்வுகளில் இப்படி இரண்டு நிலைகள் இருக்கின்றனவோ இல்லையோ, நாம் வாழும் இந்தியா இரண்டு வகை நிலைப்பாடோடுதான் இருக்கிறது. ஒன்று நவீன இந்தியா, மற்றொன்று ஏழ்மையான இந்தியா. முதலில் நவீன இந்தியாவை பற்றி பார்ப்போம்.
சாதனைகள் பல கொண்டாடிய இந்தியாதான் நவீன இந்தியா. உலகில் இருக்கும் துடிப்பு மிக்க, வளரும் நாடு இந்தியா. தொழில் வளர்ச்சி கண்ட நாடுகளின் வரிடையில் முதல் பத்து இடங்களில் ஒரு இடத்தை தக்க வைத்து வரும் தேசம். அறிவியல், தொழில்நுட்பம் இவற்றில் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக் கொண்டு ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் இந்தியாவிற்கு மூன்றாம் இடம்.
 உலகின் எந்த ஒரு பெரிய கணினி நிறுவனத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும், அதனுடைய அளவளாவிய வளர்ச்சியில் நிச்சயம் ஒரு இந்தியரின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். எழுத்துலகின் பெருமைக்குரிய சர்வதேச விருதுகளான நோபல், புக்கர், புலிட்சர் இவற்றையெல்லாம் வென்று நமக்கு பெருமை சேர்த்தவர்களும்  இந்தியர்களே . வேளாண் துறையை எடுத்துக் கொண்டாலும் சர்க்கரை, நிலக்கடலை, தேயிலை, காய்கனிகள் இவற்றின் உற்பத்தி வரிசையில் உலகிலே முதல் இடத்தில் இந்தியாதான். அரிசி, கோதுமை, பால் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இந்தியாதான். இப்படி பல்வேறுபட்ட துறைகளிலும் தன் வளர்ச்சியை அசுர வேகத்தில் செலுத்திக் கொண்டிருக்கிறது நம் இந்திய நாடு. ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த வேகத்தில் உழைத்தால் நிச்சயம் மாபெரும் பணக்கார நாடுகளில் இந்தியாதான் முதலிடத்தில் இருக்கும்.
          ஆனால் இந்தியாவின் இரண்டாவது நிலையை பார்த்தோமென்றால், மேல்கண்ட வளர்ச்சியின் வேகம் சறுக்கு மரமாய் இறங்கி கொண்டிருக்கிறது.  வறுமையிலும், அநீதிகளிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் மற்றொரு முகமாய் விளங்குகிறது இந்தியா. இந்த இணைய யுகத்தில், நம் இந்தியாவில் இருக்கும் 120 கோடியை தாண்டிய மக்களில் 75 கோடி பேர் மட்டும் தான் இந்தியாவில் வசிக்கின்றனர். மற்றவர்கள் ஊதியத்திற்காக வெளிநாடுகளில் உழைத்து வருகின்றனர். இருக்கும் இந்திய மக்களில் பலர் கணினியை கண்ணால் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், வளர்ச்சியின் சாரம் அவர்களை இன்னும் முழுமையாக சென்றடையாததுதான்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லும் இதே இந்தியாவில் தான், தெருவில் குடை பிடித்து, காலில் செருப்பு அணித்து, தோளில் துண்டு போட்டுக் கொண்டு போக கூட அனுமதி மறுக்கப்பட்டவர்கள், வாழும் கிராமங்களில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நகரங்களைக் களைந்து கொண்டு கிராமங்களுக்குள் சென்று பார்த்தோமானால்  இந்த நிலை, இந்த அவலம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சட்டப் பூர்வமான பாதுகாப்புகள் பல (காவல் நிலையம், நீதி மன்றங்கள்) இருந்தும் என்ன பயன்..? பொருளாதாரச் சுரண்டல்களும், ஜாதியில் பெயரால் இழைக்கப் படும் இன்னல்களும், அநீதிகளும், வர்க்கப் பிரிவுகளும், பால் பேதங்களும், அழிக்கவே முடியாமல் இருக்கும் லஞ்ச ஊழல்களும், மனிதனை மனிதனாய் பார்க்காமல், அவரவர்களின் தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொள்ள முற்படும் அயோக்கியத் தன்மையும் நிறைந்து கிடக்கம் இதே நவீன இந்தியாவின் கோரப்பிடியில் சிக்குண்டு வாழும் மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். இதோடு உலகில் ஊட்டச்சத்துக் குறைவோடு பிறக்கும்  குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் தான் பிறக்கின்றன என்று ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும் 25 கோடி மக்களில் 50 லட்சம் பேர் குழந்தைகள். நாளுக்கு நாள் இந்த பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்துக் கொண்டே போகிறது.     
          இது போன்ற சிறு சிறு நிகழ்வுகள் மட்டும் தான் எனக்குத் தெரிந்தவை. எனினும் எனக்குத் தெரியாத உங்களுக்கெல்லாம் தெரிந்தவை நிறைய இருக்கலாம். இது போன்ற அநியாயங்கள், வறுமைகள் ஒழிய நம்மை போன்ற படித்தவர்களும், வெளி உலகம் தெரிந்தவர்களும் என்ன செய்தோம்..? தத்தம் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே முனைவதில் ஆர்வம் காட்டுகிறோம். பொதுநலம் பாராட்டாது சுயநலம் மட்டுமே பாவிக்கிறோம். “வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் நாடு” என்று வாய்கூசாமல் மட்டும் பெருமை பிதற்றிக் கொண்டிருக்கிறோம்... அவ்வளவுதான் நாம் நாட்டுக்கு செய்தது. 
அடிப்படையாக சிந்தித்துப் பார்த்தாலே போதுமே... மற்ற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டு முன்னேறி இருக்க வேண்டும் என்பது வெளிப்படியாகப் புரியும். அதற்க்கு முதலில் ஜாதியைத்தான் ஒழிக்க வேண்டும். அந்த ஒரு வைரஸ் தான் நம் நாட்டின் ஒட்டு மொத்த ஏழ்மைக்கும் அடிப்படைக் காரணமாய் இருக்கும் என்பது எனது கருத்து. அந்த ஜாதி வைரஸில் இருந்துதான் லஞ்சம், ஊழல், புரட்டு, மோசடி போன்ற எல்லா தோற்று வியாதிகளும் உருவாகி இருக்கும். நம் முதல் கட்ட நடவடிக்கை ஜாதி என்ற ஒன்றே இல்லாமல் அழிக்க வேண்டியதுதான் 

அடுத்தது, ஆளாளுக்கு கட்டுரை எழுதி, வசனம் பேசி மட்டுமே வருகிறோமே ஒழிய மற்ற நாடுகளை விட நம் நாட்டை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் இல்லை... இந்த  இரு நிலைகளில் இருந்து மாறி, செழிப்பு மிக்க நாடாக நம் நாடு முன்னேறிவர,  நம் நாட்டின் இந்த ஏழ்மை மற்றும் அவல நிலை பற்றி தெரிந்தவர்கள்தாம்,  தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு  நாளின் அரை பாதியை, ஒவ்வொருவரும் செலவிட்டாலும் கூட  இன்னும் சில வருடங்களில்   இந்தியா வல்லரசு என்ன பொன்னரசு கொண்ட நாடாகத் திகழும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.. முடிந்த அளவு படித்தவர்கள் இதை கையில் எடுத்தால், நிச்சயம் நம்முடைய தலைமுறையிலேயே இந்தியாவை பெருமை மிக்க நாடாகக் காண்போம் என்பது முற்றிலும் உண்மையாய் நிலைத்து விடும்… பார்க்கலாம்... இந்த கட்டுரையைப் படித்து விட்டு எத்தனை இள ரத்தம் சூடாகிறது என்று....?

No comments:

Post a Comment