Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 4 March 2014

கனவுக் குழியில் நான்..


தாழாட்டும் நிஜத்தில்
தவழ்ந்து வரும்
மாய நிகழ்வுகளாய்
கனவுகள்…

என்னுள்ளும் விருட்ச்சிக்கிறது
நிலமில்லா இடத்தில்
தரை தேடும் தட்டான்கள்,
திசை அறியாது வீழ்ந்து
தரை தேடி வரும்
பனியின் மணித்துளி..

என்ன இது குழப்பமாய்..

அய்யத்துடன் அடுத்த வழி நோக்கி..

சட்டென்ற மாறலில்,
சிவப்பு ரத்தத்தை
போர்த்திக் கொண்ட வானத்தில்
திட்டு திட்டாய்
கருப்பு ஆயுதங்கள்
ஆவேச நடை போடும்
சிரமில்லா மனித முண்டங்கள்
கனவிலுங்கூட ஓர் ஜாதிக் கலவரம்..

அந்த குறுகலான பாதைக்குள்
மாற்றிக் கொள்கிறேன்
என் வழியை

சில்லரைத் தட்டுக்களாய்
சிதறி ஓடும் சிறுமிகள்
ஆடையற்ற உடலுடன்..
கேட்டால் அங்கு 
புணர்ச்சி என்பது
பாவச் செயலாம்..

என்ன கனவோ…
வழி திரும்பலாம்
என அடுத்த அடி வைக்கையில்
இலகுவான மண் பிசைவுக்குள்
மெல்ல மெல்ல சிக்கியது..

என் கால்கள்
அமிழ்கிறேன் அமிழ்கிறேன்
கை எட்டும் திசையில்
ஆலமர வேர் இருந்தும்
சிக்கி சிக்கி புதைய போகிறேன்..

என் அத்தியாயத்தின்
முடிவுரை இப்படித்தான் போல
என கண்ணீர் வடிக்கையில்,


பட்டான ஓர் பெண் கரம்
மெல்ல என்னை இழுக்கிறது
முகம் பார்க்க எண்ணுகையில்
என்னை வெளியில் தள்ளி விட்டு
ஓட எத்தனிக்கிறது

கொட்டிய இருட்டில்
பதித்து வைத்த 
நிலவாய் அவள் முகம்
கண்டுகொண்டேன்..

அன்று
சம்பிரதாயம் பார்க்கையில் 
சபித்து திட்டிய அந்த
வெள்ளை உடை கொண்ட
விதவைதான் என…

ச்சே.. மனித வாழ்வு எவ்வளவு 
புனிதமானது…
உணர்ந்து கொண்டேன்… 

நிஜம் திருத்தாத என்னை
நியாயமாய் திருத்தியது
அந்த கனவு
இன்றும் என் நினைவில்..

Tuesday, 17 September 2013

உதிர்ந்து போன நான்....

தனிமையின் சிறகுகள்
இறுக்கி கொண்டிருக்கிறான
காலக் கொடூரன்
நகர்வத்தில் சூனியம் 
வைத்துக் கொண்டான் போலும்...
இருட்டின் தூறலில்
முழுவதுமாய் நனைந்து
விரக்தியின் தாககத்தில்
மெளனமாய் நான்...
இறை உண்ண வந்தவைகளாய்
என்னை தின்று தீர்க் கின்றன
வறுமை எறும்புகள்
பாறையில் முளைவிட்ட
நஞ்சு கொடியாய்
சுற்றி வளைத்து விட்டன
குடும்ப பொறுப்புகள்...
திணறி, பிதற்றி
துவண்டு வெம்பி
காற்று நீங்கிய
லோகமாய் வறண்டு போய்
உதிர்ந்து போன நான்....

Wednesday, 21 August 2013

சினப்படு... சினந்தெழு... சினத்து வீசு....

நாற்றிசைகளிலும் எறிகுண்டுகளால் 
நாளொரு தினமும்  உன் இனம் அழிய,
கால் உயிரும் கடை உயிருமாய்
அல்லோலப்பட்டு அடிமை படுத்தப்பட்ட 
ஈழ சகோதர சகோதரிகளின் வேதனையின் உச்சத்தில்
குதூகலித்து கும்மாளமிடும்
காமன் வெல்த் கேட்கிறதோ...?
எகத்தாளம் செய்து எடுக்கப் பட்ட
திரைப்படம் பார்த்து பூரிக்க வேண்டுமோ...?
அறுத்தெறிய வேண்டும்
இந்த அலங்கோலங்களை…

ரத்தம் கசிந்து கொண்டிருக்கும்
ஈழ பூமியில் 
ஈரமே இல்லாமல்
நம்மினத்தவர்களின் உயிர்களை தகர்த்தெறிந்தவர்களை 
வேரருக்க வீறு நிறைந்து
வேட்கை பருகி
வீர கர்ஜனையொடு யோ
சிலிர்த்தெழு தமிழா...!!

பீனிக்ஸ் பறவைக்கூட 
வெப்பத்தை வென்று 
சினம்கொண்டு மாற்று அவதாரம் புரிகிறது,

சுட்டு பொசுக்கும் தீப்பிழம்பின் உக்கிரத்தில் 
பால் கூட வெகுண்டு – வழிந்து ஓடி
தீ அணைத்து சினம் ஆற்றுகிறது,

கொங்கு தமிழின் சாராம்சம் 
ஓங்கி எழ,

தமிழ் இனம் போற்ற பட



சினப்படு...
சினந்தெழு...
சினத்து வீசு....

சினந்து எழும் காற்றும்
புயலாகும்போது 
பொங்கி எழுந்த நீ
பெரும் போராளியாய் 
கனல்வீசு
வீராவேசத்துடன்...

விடுபடட்டும் நம் இனம்
விடுதலையாகட்டும் நம் குலம்...
புறமுதுகு காட்டா நாம் வீரம்
செருக்கோடு வாங்கி தரட்டும் தமிழ் ஈழத்தை...
களம் கண்டு வெற்றி சூடடா…
கர்வத்தோடு சொல்கிறேன் அப்பொழுது 
“தமிழா நீ என் இனமடா”

                              - தீபா வெண்ணிலா

Tuesday, 18 June 2013

புலம்புகிறது ஒரு சதைப்பிண்டம்....



                                                                                              அவர்கள் பார்வையில் 
நீ உயிரல்ல...
நீண்ட கூந்தலும்
கனத்த மார்புகளும்
பருத்த தொடையுமான
ஒரு சதைபிண்டம்தான்....

அவர்கள் சுவாசிக்க 
காற்றடைத்த குழாயாய் 

அவர்கள் ருசிக்க 
அறுசுவை கலந்த பண்டமாய் 

அவர்கள் குடிக்க 
சாறு நிறைந்த பலமாய் 

வேதனை தீர்த்துக்கொள்ள 
சேலை கட்டிய இச்சையரசியாய் 

வசியம் ஏற்றுக்கொள்ளும் 
வயாகரா மருந்தாய் 

வெளியேற்றும் விந்துக்களை 
பத்திரப்படுத்தும் பெட்டியாய் நீ...

இப்படி அவர்களுக்கு 
எல்லாமுமாய் இருந்த 
உன்னை எவர் மதித்தார்?

உன் உணர்ச்சிகளுக்கு 
இங்கே 
உயிர் உண்டா என்ன?

நகைப்புதான் மிஞ்சுகிறது ;

உன்னை உயிரிணையாய் 
பார்க்க மறந்தவர்கள் 
எப்படி உன் உணர்வுகளுக்கு 
உயிரூட்டம் கொள்வார்கள்....?

தினசரி பஞ்சணையில் 
கட்டி உருள வந்தவர்கள் 
ஊதி விளையாடியது 
பஞ்சாய் உன்னை

கட்டிய மனைவியினை 
எட்டி உதைத்தவர்கள் 
கிட்ட அணைக்க 
ஒட்டிவருவது 
உன் மாராப்பு
அழுக்காக்க…

தினசரி இரவுகளில் 
காமக் கொடூரர்களின் 
வெறியாட்டத்தோடு 
போட்டி போட்டு 

கடைசி நேர 
கலவி முடிந்ததும் 
தூரம் போய் 
தொலைந்து போகிறது 
மானத்தோடு 
கற்பும்...

பசியின் பிணி 
தீர்க்க 
பல கழுகுகளின்
இச்சை தீர்க்க வேண்டிய 
கட்டாயம்

அழிய வேண்டிய 
சமுதாயத்தில் 
ஓர் அங்கமாய் 
அலைகிறேன் 
நானும் ...


காரி உமிழும் 
சமூகத்திற்கு 
அது தரப்பு நியாயம்தான் பெரிது 

இருந்துவிட்டு போகிறது 
சமூகம் தரவில்லை 
உருப்படியாய் 
ஒரு வேலை சோறு...

பின், புகழ்ந்தால் என்ன
காரி உமிழ்ந்தால் என்ன...?
எதை எதையோ 
துடிக்கும் என் முந்தானை 
இதையும் சேர்த்து 
துடைக்காதா என்ன?

Friday, 19 April 2013

கூடு உரித்த பட்டாம்பூச்சியே....

 
கூடு உரித்த
பட்டாம்பூச்சியே
உலகு பார்த்த
உன்னுடைய இந்த முதற்பொழுதில்
தூதாய் போய் வா
... தலைநகர் சென்ற எந்தலைவனிடம்...

அவர் மேனி தீண்டாது
சொல்லி வா என் சோகத்தை....

"கார்குழல் கழுத்துடை தரித்து
வெண்புரவி மேலோடும்
அஞ்சா நெஞ்சுடைய தலைவா...
உன் நிழல் படா
நுன் தலைவியி னுடல்
மேனி ரோமம் சிலிர்ப்படைய,
உணவிறங்கா சோர்ந்துபோன
உடல் மெருகேற,
கவலைதோய்ந்த மனம்
புத்துணர்ச்சி பெற
தாமதம் காட்டாது
புரவியை திருப்புவாயாக...

"ஏக்கத்திலே உயிர் துறக்க
அவள் தயாராகி விட்டாள்
நீ வரவேண்டி...
விரைவாயாக...."
என்று

Thursday, 18 April 2013

மன்னிக்க முடியாது உன்னை....

மன்னிக்க முடியாது உன்னை....
மரத்து போன என் இமைகளுக்கு
சிமிட்ட முடியவில்லை...
உலர்ந்து போன என் நாவிற்கு
சுவைக்க அறிய முடியவில்லை...
குழைந்து போன என் மேனிக்கு
தெளிவு பிறக்கவில்லை...
அடங்கிப் போன என் மனதிற்கு
ஆளுமை வரவில்லை....
இறந்திருந்த என் நினைவுகளுக்கு
உணர்ச்சி கிடைக்கவில்லை...
சகல நிறுத்தத்திற்கும்
சாமானியமாய் அமைந்த காரணம்
பெண் தானே என்று
என்னை இளக்காரம் செய்த நீ...
என்னுள் பாதியை அமைந்த நீ
என் சோகம் பங்கிட்ட நீ
என் உரிமையோடு போட்டியிட்ட நீ
என்னல்மே நானான நீ
இன்று உதாசீனப்படுத்தினாய்
"பொம்பளைமாதிரி நட" என்று...
உனக்காய் உருக்குலைந்த நான்
இன்று உருவாரம் எடுக்கிறேன்
பெண்ணென என்னை இகழ்ந்த 
உன் வீரபொய்மை
விரைவில் பொய்த்துவிட...

நிறுத்தத்தில் நிற்கும் நிகண்டுகள்....

 

 
 
அரசலும் உரசலுமான பேருந்து பயணத்திற்கு
அவதி அவதியாய் அரைத்த துவையலில்,

கூலிக்கு செல்லும் அம்மாவிற்கு கொஞ்சமும்
தனக்கு வைத்த தயிர் சோறுக்கு கொஞ்சமும்
அள்ளிக்கொண்டு,

லேசாய் செய்த முகப்பூச்சோடு 
மடிப்பான சேலையை எடுத்துவிட்டு கிளம்பினேன்....

நிறுத்தத்தில் நின்ற கூட்டத்தோடு சேர்ந்து
நானும் நசுங்க தயாராக்கினேன் உடலும் மனதும் சேர்ந்து...

 
"வகிடு எடுத்த தலையில்
வழித்து வைத்த எண்ணையோடு
 
பிசிறு நீங்கிய பின்னலில்
கொஞ்சம் சொருகிய பூவோடு
எளிமையான உடையில் தயாரான
கல்லூரி பெண்கள்...

அவர்களை கண்ணும் கருத்துமாய்
காவல் செய்து கடலை போட
தயாராய் இருந்த விடலை பையன்கள்...

தினசரி கூலி பெற
பழைய சோறு வாளி தூக்கிய
குடும்ப பொறுப்பாளர்கள்...

வீட்டுபாரம் சுமக்க படிப்பை துறந்து
சிறு கடைகளுக்கு எடுபிடியாய்
அடிமைப்பட்ட, ஏக்கம் நிறைந்த
விழிகளைக் கொண்ட
'சிறுமி - கன்னி' இரண்டிற்கும் இடைப்பட்ட பெண்கள்...

பட்டிக்காட்டிலிருந்து பட்டணம் நோக்கி
படிப்பு பெற பொதிமூட்டையாய்
புத்தகப் பையுடன் எதிர்பார்த்த பேருந்தை
எட்டி நோக்கிய வண்ணம் நிற்ற பள்ளி சிறார்கள்...

அடிக்கடி இருமலுக்கும்
அவதிப்படும் உடம்புக்கும்
வைத்தியம் பார்க்க
அரசு ஆஸ்பத்திரிக்கு போக முனைத்த வயோதிகர்கள்..

கம்புக்கு கட்டிய சேலையையும்
காமத்தோடு நோட்டம் விடுவதுபோல்
நிற்றிருந்த கழிசடைகள்....

காதலிக்கு ஏற்றவாறு
காதல் பாட்டு செல்போனில் 
ஒலிக்கவைக்கும் சில்லுவண்டுகள்...

இவர்களுடனான என் பயணம்
தொடர்கிறது தினந்தோறும்...

Tuesday, 16 April 2013

நவிழ்ச்சி அடையுமல்லோ...?

துளி உயிர்
மீண்டெழ
நா நுனியோரம்
நல்முத்தம்
ஈன்றாயென்றால்
நறுமுகையான
நென்மனம்
நவிழ்ச்சி அடையுமல்லோ...?

மனம் திருடிய மழைத்துளியே.....




மனம் திருடிய
மழைத்துளியே.....
ஏன் மறந்தாய்
எனை இத்தனை நாளாய்...?
உனது சஞ்சரிப்பில்
ஒருங்கிணைய
என்வசம்
மறந்துபோக
செதுக்கிய இதழ்களில்
மிஞ்சிய துடிப்போடு
காத்திருக்கிறேன்...




உலர்ந்த மண்ணுக்கு
உயிர் தந்த நீ
என்னுள்ளும்
தூறல் போடு...
அந்தானத்தில்
மழலையாய் மாறிப்போன
என்னை அள்ளி
அனைத்துகொள்ளு
அன்னையாக....

Thursday, 11 April 2013

உயிர் திரித்ததால்....

வற்றிய உதடுதுணுக்குகளில்
ஒட்டிக்கிடந்த ஈரப்பசையை
நாவால் ஒற்றி எடுத்து
மீண்டுயிர் பெற்றேன்
நின்னுடனான ஏக்கம்
உயிர் திரித்ததால்....

செந்நிறக் கண்ணனே....

தீப்பிழம்பை திரியாக்கினார்ப் போல்
சிவந்த செந்நிறக் கண்ணனே....
இதென்று காரும் னென்
காமமறியாக் காதலிதனைக்
கடைக்கண் வீச்செடுத்து களங்கமின்றி
எடுத்தியம்பி
என்நியலான துன்பமறைய
தெவிட்டாத தினையமுதாம்
நின்னன்பை
ஈட்டியருள்வாய் நீ
என்றனுள்ளம்தனிலே....

Saturday, 5 January 2013

"பொங்கலோ பொங்கல்"


காசு, பணத்துக்கு கஷ்டப்பட்டு 
கழனியெல்லாம் நீறேரச்சு,
நாத்துகளை நட்டுப்போட்டோம்...
மனசறிஞ்சு முளைச்ச 
பயிரெல்லாம் 

முத்து முத்தா நெல்லாவி 
கரையெங்கும் பசும்பச்சை, 
கண்ணுக்கெதமா குளிர 
எங்க மனசெல்லாம் 
இப்ப இன்ப மழைதான்....


பின்ன அறுவடைக்கு ஆள்புடிச்சு 
காத்திருந்து காத்திருந்து, 
குடும்பமா சேந்து,
சின்னஞ் சிறுசும் 
ஒத்தாவிச்சு அருப்புநாளில....


இருகரு கர்ப்பிணி யானையாய் 
கட்டெல்லாம் கனம் காண 
தூக்கமாட்டாம தூக்கி
களத்துமேடு சேத்து
அலுப்புமறைய பாட்டுபடிச்சு,
பதறெடுத்து சக்கையில செஞ்சோம் 
வைக்கபோரு...

நெல்லுமணி கண்சிமிட்ட 
படிப்படியா அளந்தெடுத்து 
கூலிபோக கொடுத்தனுப்பி 
பொடச்செடுத்த பச்சரியில 
பொறந்தபுள்ள முகம்கண்டோம்....
தமிழன் பரம்பரையில 
வந்தவங்க நாங்க...
நாலெழுத்து படிச்சதில்லை....


தெரிஞ்சதெல்லாம்
பகுத்தறிவு பாசமும் 
மனிதநேய மனசும் 
சுயமரியாதையோட 
சமத்துவ சமரசமா 
 வாழுறோம் நாங்க....
எங்க பரம்பரையில வந்த தமிழ் புத்தாண்டே....


ஒன்ன வரவேற்க 
புது உடுப்பு போட்டு 
பொங்க பானையில 
பச்சரிசி புதுசு போட்டு 
எழுப்பிடுவோம்
சோம்பல் முறிக்கும் கதிரவனை
"பொங்கலோ பொங்கல்"
குலவையிட்டு...