Thursday 6 September 2012

இயற்கையின் காதலன்...

இதென்ன அதிசயம்...
இந்த காலைப் பொழுதில் மட்டும்
இந்த பூமியே புத்தம் புதிதாய்க்
காணப்படுகிறதே...

அதோடு என் தோட்டத்தில்
குவிந்த மொட்டுக்கள் அனைத்தும்
இதழ் திறந்து இன்னிசை
கச்சேரி நடத்திக் கொண்டிருக்கின்றனவே...

பூத்துக் குலுங்கிய பூக்களும்
அதிவிரைவாய் தங்களின்
அழகை மெருகேற்றுவதில்
மும்முரம் காட்டிக் கொண்டிருக்கின்றனவே...

அதி மலர்ச்சியாகவும்
கண்களுக்கு குளிர்ச்சியாகவும்
வண்ணத்துப் பூச்சிகளும்
வண்ணப் பூக்களும்
புத்தாடை அணிந்து
யாருடைய வருகைக்காகவோ
எதிர்நோக்கி காத்திக் கொண்டிருக்கின்ற
நிலை கண்டு
ஆச்சர்யத்தில் அமிழ்ந்து போய்
திகைத்து நிற்கையிலே
ஒற்றைப் பனித்துளி
சுமந்த சிவப்பு ரோஜா
அதன் இதழ் குவித்து
என் காதருகினில் வந்து
கட்டளையிட்டது...

" அவன் நிழல் பட
நான் பூத்துவிட்டேன்...
இன்று அவன் இதழ் தொட
என் இதழ் விரித்து
காத்திருக்கிறேன்
காத்திருப்பது நான் மட்டுமல்ல
அவன் ஸ்பரிசமும்
நிழலும் பட்ட அனைவருமே...
இங்கிருந்து சென்று விடு...
உன்னை அவன் தரிசிப்பதற்கு முன்
அவன் கரிசனம் நாங்கள் பெற்று விட..."
என்றது...

வெளியேறி விட்டேன்
அவைகளின் மகிழ்ச்சிக்காக...

அதோ தூரத்தில்
வந்து கொண்டிருக்கிறான்
என் உயிர்க் காதலன்....
இல்லையில்லை...
இயற்கையின் காதலன்...

No comments:

Post a Comment